’2018-இல் நடந்தது ஞாபகம் இருக்கா?’-குரூப்4, நில அளவர் தேர்வு முடிகளும் TNPSC-ன் விளக்கமும்

சமீபத்தில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட குரூப் 4 தேர்விலும்,  1089 காலிப் பணியிடங்களுக்கான நில அளவையர் தேர்விலும் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதுதொடர்பாக விரிவாக காணலாம்..
நில அளவர் தேர்வு முடிவில் என்ன சர்ச்சை?
தமிழக அரசின் நில அளவை துறையில் பணியாற்றுவதற்காக ஆயிரம் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு, அதற்கான தேர்வு 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் வெளியாகி, இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து கலந்தாய்வு நடைபெற்று, தேர்வு செய்யப்பட்டவர்களின் பதிவு எண்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதில் தேர்ச்சி பெற்றவர்களின் பெரும்பாலான பதிவெண்கள் ஒரே மையத்தைச் சேர்ந்தவர்கள். அதாவது ஒருவருக்கு பின் ஒருவர் தேர்வாகி இருப்பது தெரிய வந்துள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் அங்குள்ள தனியார் பயிற்சி மையத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

image
டிஎன்பிஎஸ்சி விளக்கம்
நில அளவர் தேர்வில் ஒரே பயிற்சி மையத்திலிருந்து அடுத்தடுத்த பதிவெண் கொண்ட தேர்வர்கள் 700 பேர் தேர்ச்சி பெற்ற விவகாரம் குறித்து  டிஎன்பிஎஸ்சி விசாரணை நடத்தும் என்றும் குரூப் 4 தேர்வில் 2,000 பேர் ஒரே பயிற்சி மையத்தில் படித்து தேர்வாகியுள்ளதாக அந்த பயிற்சி மையம் தெரிவித்துள்ள விவகாரம் குறித்து  டிஎன்பிஎஸ்சி கவனத்தில் கொள்ளும் என்றும் விளக்கமளித்துள்ளது.
குரூப் 4 தேர்வில் என்ன சர்ச்சை?
கடந்த மார்ச் 24ம் தேதி 10,117 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. எழுத்துத் தேர்வின் அடிப்படையில், ஒட்டுமொத்த தரவரிசையிலும், இடஒதுக்கீடு தரவரிசையிலும்  தேர்வர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. ‘குரூப் 4 தேர்வில் டைபிஸ்ட் பிரிவில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் தரவரிசையில் முன்னனியில் வந்தது குறித்து சந்தேகங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
டிஎன்பிஎஸ்சி விளக்கம்
குரூப்4 தேர்வு முடிவுகள் தொடர்பாக விளக்கமளித்துள்ள டிஎன்பிஎஸ்சி, குரூப் 4 அறிவிப்பின் போதே டைபிங் பிரிவில் இரண்டு ஹையர் முடித்தவர்களுக்கே  ரிசல்ட்டில் முன்னூரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளதாகவும்  அந்த வகையில் மதிப்பெண் குறைந்தவர்கள் டைபிங் பிரிவில் கிடைத்த முன்னூரிமையால் தரவரிசையில் முன்னனி இடம் பிடித்ததாக டிஎன்பிஎஸ்சி விளக்களித்துள்ளது

விசாரணை வேண்டும் – ராமதாஸ் அறிக்கை
இந்த விவகாரம் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாடு அரசுத்துறைகளுக்கு 1089 நில அளவர், வரைவாளர்களை தேர்வு செய்வதற்காக கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி போட்டித்தேர்வில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய ஏறக்குறைய 700 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். வாய்ப்பில்லாத இந்த சாதனை ஐயத்தை ஏற்படுத்துகிறது.
மொத்தமாக தேர்ச்சி பெற்ற 700 பேரும் காரைக்குடியில் உள்ள மையத்தில் தேர்வு எழுதியுள்ளனர். அவர்களின் பெரும்பான்மையினர் காரைக்குடியில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்பது ஐயத்தின் அளவை உயர்த்தியிருக்கிறது. வெற்றி பெற்றவர்கள் முறையாக பயின்று திறமையால் தேர்வில் வெற்றி பெற்றிருந்தால் மகிழ்ச்சி தான். ஆனால், மொத்த பணியிடங்களில் 70% இடங்களுக்கு ஒரே மையத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெறுவது இயற்கைக்கு எதிரானது என்பதால் அது குறித்த உண்மைகள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும்.
2018-இல் என்ன நடந்தது?
2018-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நான்காம் தொகுதி தேர்வில் முதல் 100 இடங்களில் ராமேசுவரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதிய 35 பேர் இடம் பெற்றிருந்தது குறித்த ஐயத்தின் அடிப்படையில் விசாரணை நடத்திய போது பெருமளவில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டது. நில அளவர் தேர்விலும் அத்தகைய முறைகேடுகள் ஏதேனும் நடைபெற்றதா? என்பதை நாட்டுக்கு தெரிவிக்க வேண்டியது கட்டாயம் ஆகும். எனவே, இது குறித்து விசாரணை நடத்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.