டிஎன்பிஎஸ்சி நில அளவர் தேர்வை ஒரே நடுவத்தில் எழுதிய 700 பேர் தேர்ச்சி பெற்று இருப்பதும், ஒரே தேர்வு மையத்தை சேர்ந்த 2000 பேர் தேர்ச்சி பெற்று இருக்கும் சம்பவத்தில் முறையான விசாரணை நடத்தப்படும் என்று, டிஎன்பிஎஸ்சி விளக்கமளித்துள்ளது.
தமிழ்நாடு அரசுத்துறைகளுக்கு 1089 நில அளவர், வரைவாளர்களை தேர்வு செய்வதற்காக கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி போட்டித்தேர்வில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய ஏறக்குறைய 700 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.
மொத்தமாக தேர்ச்சி பெற்ற 700 பேரும் காரைக்குடியில் உள்ள நடுவத்தில் தேர்வு எழுதியுள்ளனர். அவர்களின் பெரும்பான்மையினர் காரைக்குடியில் உள்ள தனியார் பயிற்சி நடுவத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
வெற்றி பெற்றவர்கள் முறையாக பயின்று திறமையால் தேர்வில் வெற்றி பெற்றார்களா? என்று கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில் முதல் 100 இடங்களில் இராமேசுவரம், கீழக்கரை நடுவங்களில் தேர்வு எழுதிய 35 பேர் இடம் பெற்றிருந்த நிலையில், இதுகுறித்த விசாரணையில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 -ல் ஒரே தேர்வு மையத்தை சேர்ந்த 2000 பேர் தேர்ச்சி பெற்றது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், இதுகுறித்து முறையான விசாரணை நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி விளக்கமளித்துள்ளது.