புதுடெல்லி: டெல்லி மதுபான விற்பனை கொள்கை ஊழல் வழக்கில், அமலாக்கத்துறை பிறப்பித்த சம்மனை எதிர்த்து, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
டெல்லி மதுபான விற்பனை கொள்கையால் ஆதாயம் அடைந்த மது விற்பனையாளர்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.100 கோடி லஞ்சம் வழங்கியதாக குற்றச்சாட்டப்பட்டது. இந்த ஊழல் வழக்கில் துணை முதல்வராக இருந்து மணிஷ் சிசோடியா உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். மதுபானங்களை விநியோகித்த சவுத் குரூப்-ல் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும், பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான கவிதா உட்பட பலருக்கு தொடர்பு உள்ளது. இதனால் கவிதாவிடம் அமலாக்கத்துறை கடந்த 11-ம் தேதி விசாரணை நடத்தி அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தது. கடந்த 21-ம் தேதி கவிதாவிடம் அமலாக்கத்துறை 10 மணி நேரம் விசாரணை நடத்தியது.
இந்த விசாரணையின் போது அமலாக்கத்துறை கைது நடவடிக்கையில் இருந்து பாதுகாப்பு வழங்க கோரி உச்ச நீதிமன்றத்தில் கவிதா மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் கடந்த 15-ம் ஒப்புக் கொண்டது. அதன்படி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி மற்றும் பெலா எம் திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு, கவிதாவின் மனுவை இன்று விசாரிக்கிறது.