வாஷிங்டன்-அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள இந்திய துாதரகத்தின் முன், காலிஸ்தான் ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர். அப்போது, அமெரிக்காவுக்கான இந்திய துாதருக்கு, அவர்கள் பகிரங்க மிரட்டல் விடுத்தனர்.
பஞ்சாபை, காலிஸ்தான் எனும் பெயரில் தனி நாடாக அறிவிக்கும்படி, பஞ்சாபை சேர்ந்த தீவிரவாத குழுவினர் பல ஆண்டுகளாக குரல் கொடுத்து வருகின்றனர். அவர்கள் அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அதிக அளவில் குடிபெயர்ந்துள்ளனர்.
ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டன் மற்றும் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ ஆகிய இடங்களில் உள்ள இந்திய துாதரகங்கள் முன், காலிஸ்தான் ஆதரவாளர்கள் சமீபத்தில் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள இந்திய துாதரகம் முன், காலிஸ்தான் ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர்.
அப்போது பேசிய போராட்டக்காரர்கள் பலர், காலிஸ்தான் விவகாரத்தில் இந்தியாவில் மட்டுமின்றி, அமெரிக்காவிலும் வன்முறை வெடிக்க வேண்டும் என்றும், இந்திய துாதரகத்தை சூறையாட வேண்டும் என்றும் பேசினர்.
இதனால் உஷாரான போலீசார், துாதரகம் முன் அதிகப்படியான போலீசாரை குவித்தனர். துாதரகம் முன், மூன்று போலீஸ் வேன்கள் நிறுத்தப்பட்டன.
அப்போது, காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஐந்து பேர் திடீரென சாலையை கடந்து, துாதரக தற்காலிக தடுப்பை உடைத்து உள்ளே நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் எச்சரித்ததை தொடர்ந்து, அவர்கள் போராட்ட களத்திற்கு திரும்பினர்.
மேலும், அமெரிக்காவுக்கான இந்திய துாதர் தரண்ஜித் சிங் சந்து குறித்து தரக்குறைவாக கூச்சலிட்ட காலிஸ்தான் ஆதரவாளர்கள், அவருக்கு பகிரங்க மிரட்டல் விடுத்தனர். இந்த சம்பவத்தின் போது தரண்ஜித் சிங் துாதரகத்தில் இல்லை.
தாக்கப்பட்ட நிருபர்!
இந்த போராட்டத்தில், பி.டி.ஐ., எனப்படும், ‘பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா’ என்ற இந்திய செய்தி நிறுவனத்துக்காக, வாஷிங்டனில் லலித் கே.ஜா என்ற நிருபர் செய்தி சேகரிக்க சென்றார். இதை விரும்பாத காலிஸ்தான் ஆதரவாளர்கள், அவரை செய்தி சேகரிக்க விடாமல் இடையூறு செய்தனர்; அவருக்கு தொடர்ச்சியாக மிரட்டல் விடுத்தனர்; தகாத வார்த்தைகளால் திட்டி அவரை அங்கிருந்து பிடித்து தள்ளினர். போராட்டக்காரர் ஒருவர், கையில் இருந்த காலிஸ்தான் கொடியால் தாக்கினார். அது, நிருபரின் இடது காதில் தாக்கியது. இதையடுத்து போராட்டக்காரர்களை போலீசார் எச்சரித்தனர்.
கனடா துாதருக்கு சம்மன்!
வட அமெரிக்க நாடான கனடாவில் உள்ள இந்திய துாதரகத்தின் முன், காலிஸ்தான் ஆதரவாளர்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், நம் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கனடாவில் உள்ள இந்திய துாதரக அதிகாரிகள் மற்றும் துாதரக வளாகத்தின் பாதுகாப்பை கனடா அரசு உறுதி செய்யும் என நம்புகிறோம்’ என, தெரிவித்துள்ளார்.மேலும், இந்திய துாதரகத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் போலீஸ் பாதுகாப்புடன் காலிஸ்தான் ஆதரவாளர்கள் அனுமதிக்கப்பட்டது குறித்து, இந்தியாவுக்கான கனடா துாதரிடம் விளக்கம் கேட்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்