ராகுல் காந்தியை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்த விவகாரம் தான் தற்போது நாடு முழுவதும் காட்டுத் தீயாக பரவி, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையே ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
‘உலகிலேயே ஜனநாயகத்தை பறைசாற்றும் நாடாக இருக்கும் இந்தியாவிலேயே இப்படியொரு ஜனநாயக விரோத செயல் நடந்திருப்பது வெட்கக்கேடானது’ என்றெல்லாம் கூறி எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அரசியல் தலைவர்களும் மத்திய பாஜக அரசை கடுமையாக சாடி வருகிறார்கள்.
மேலும் இதற்கு தீர்க்கமான எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருப்பு நிற உடை அணிந்தும் ராகுல் காந்திக்கு ஆதரவாக கோஷமிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் ஒரு நிமிடத்திலேயே அவை முடங்கியதால் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டன.
கருப்பு சட்டை அணிந்து பேரவைக்கு வந்த தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் #TNAssembly | #Congress | #RahulGandhi pic.twitter.com/nU8BB02FP1
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) March 27, 2023
இதனிடையே தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான பொதுவிவாதம் நாளை (மார்ச் 28) தொடங்கவிருக்கும் நிலையில், இன்று (மார்ச் 27) பேரவை கூடியது. அந்த பேரவைக் கூட்டத்தில் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து கவனத்தை ஈர்க்கும் வகையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 13 பேரும் கருப்பு உடை அணிந்து வந்தனர்.
அவர்களை போலவே, கோவை தெற்கு தொகுதியின் எம்.எல்.ஏவான பாஜகவின் வானதி சீனிவாசனும் இன்று சட்டப்பேரவைக்கு கருப்பு நிற உடை அணிந்து வந்தார். இது காண்போரை ஆச்சர்யத்துக்குள்ளாக்கியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி கேள்வி எழுப்பியதற்கு “அய்யோ.. எனக்கு நீங்க இப்படி வர்றது தெரியாது. நான் எதேச்சசையாக கருப்பு உடை அணிந்து வந்துவிட்டேன்” என சிரித்தபடியே நகர்ந்து சென்றார்.
இதனையடுத்து பேரவையில் சபாநாயகர் அப்பாவு வானதி சீனிவாசனிடம் “காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போலவே கருப்பு சீருடையில் வந்திருக்கிறீர்கள். நீங்களும் அதே யூனிஃபார்மில் வந்ததாக தெரிகிறது” என கேட்டிருக்கிறார். அதற்கு “எமர்ஜென்சியின் போது எப்படியெல்லாம் தமிழகத்தில் உள்ள ஆளுங்கட்சியினர் சிரமப்பட்டார்கள் என்பதை நினைவூட்டவே கருப்பு உடையில் வந்திருக்கிறேன்” என வானதி கூறினார். இச்சம்பவம் இன்று பேரவையில் சுவாரஸ்யத்தையும் கலகலப்பையும் ஏற்படுத்தியது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM