அரசுப் பணிகளில் அவுட் சோர்சிங் முறை: மீண்டும் சொன்ன பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

அரசுப் பணிகளில் அவுட்சோர்சிங் முறையில் தகுதியான நபர்களை பணியமர்த்துவது தொடர்பாக நிதி மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முறைகேடு நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் தேர்வு எழுதுவதால் பல்வேறு குளறுபடிகளும் நடைபெறுகின்றன.

நில அளவையாளர், குரூப் 4 தேர்வுகளில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய அடுத்தடுத்த பதிவெண் கொண்ட சுமார் 700 பேர் தேர்ச்சி பெற்றிருப்பதும், ஒரே பயிற்சி மையத்தில் பயின்ற சுமார் 2000 பேர் தேர்ச்சி பெற்றதும் சர்ச்சையை கிளப்பியது.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் விரிவான விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், விளக்கம் வந்ததும் அறிவிப்பதாகவும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

மேலும் அவர் சட்டப் பேரவையில் அரசுப் பணிகளில் அவுட் சோர்சிங் மூலம் ஆள்களை நியமிப்பதன் அவசியம் குறித்து பேசினார்.

“சில விஷயங்களை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். டிஎன்பிஎஸ்சியை பல வகைகளில் சீர்திருத்தம் செய்ய வேண்டும். மூன்று ஆண்டுகள் தேர்வே நடத்தப்படவில்லை. அதற்கு முன் நடத்திய சில தேர்வுகள் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே மனிதவள சீர்திருத்தக் குழுவை உருவாக்கி தேர்வு செய்ய வேண்டும் என்று இதற்கு முன் கூறினேன் எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

எனக்கு ஒரு நாள் ஒரு கோப்பு வந்தது. அதில் டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்த ஏற்கெனவே ஒதுக்கிய தொகையை விட கூடுதலாக 45 கோடி ரூபாய் தேவை என்றிருந்தது. என்னவென்று விசாரித்தால் எதிர்பார்த்ததை விட மிக அதிக அளவிலான நபர்கள் விண்ணப்பித்திருந்தார்கள். 7 ஆயிரம் பணியிடங்களுக்கு 24 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இத்தனை பேருக்கும் வினாத் தாள், விடைத்தாள் அச்சிடுவது, தேர்வு மையங்களை உருவாக்குவது, கண்காணிப்பாளர்களை நியமிப்பது என பல பணிகளுக்கு நிதி தேவை என்று கூறினர். இதற்காக நூறு கோடி தாள்கள் அச்சிடப்பட வேண்டும்.

இவற்றை எல்லாம் ஆய்வு செய்தபோது, 7 ஆயிரம் பேரை தேர்வு செய்ய 24 லட்சம் பேருக்கு ஒரே நாளில் தேர்வு வைப்பது என்பது இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் திறனற்ற வழிமுறை.

அரசு வேலைகளில் தற்காலிகமாக பணியாற்றுபவர்கள் மிகக் குறைவாக 5 ஆயிரம், 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்கள். அதே வேலையில் நிரந்தர பணியாளர்கள் லட்சங்களில் சம்பளம் வாங்குகின்றனர். இது நியாயம் அல்ல.

எனவே தான் அவுட் சோர்சிங் மூலம் ஊழியர்களை நியமித்து அவர்களுக்கு முறையான ஊதியம் வழங்கி இபிஎஃப், இஎஸ்ஐ ஆகியவற்றில் சேர்க்க வேண்டும் என்று கூறி அரசாணை கொண்டு வந்தோம். ஆனால் எதிர்கட்சிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. சமூக நீதிக்கு எதிராக செயல்படுவதாகவும் கூறினர்,

சமூக நீதி அடிப்படையிலும் மனித வளத் துறையை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திலும் எந்த அரசுக்கும் பின் தங்கிய அரசு இல்லை தமிழக அரசு.

எனவே எல்லோரும் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்” என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.