பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களுக்கு எதிர்கட்சியினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிவாரணம் தொடர்பா இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் கிடைக்காது, எரிபொருள் பிரச்சினை தீராது, மின்சாரப் பிரச்சினை தீராது என்றெல்லாம் எதிரணிகள் விமர்சனங்களை முன்வைத்து வந்த நிலையில், இவற்றுக்கு ஜனாதிபதி தீர்வை பெற்றுக் கொடுத்துள்ளார். அன்று நாட்டில் ஏற்பட்டிருந்த நெருக்கடி நிலைமையை சீர்படுத்தியுள்ளார். எனவே, மக்கள் மத்தியில் போலியான கருத்துகளை பரப்பி, மக்களை தவறாக வழிநடத்துவதற்கு முற்படக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் மத்தியில் பொய் வதந்திகளை பரப்பிவிட்டமையும், அரசியல் ரீதியில் கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட சில முடிவுகளும் பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு காரணம். கடந்த காலங்களில் நடந்த தவறை ஜனாதிபதி தற்போது சீர்செய்துள்ளார். இதிலிருந்து உண்மை நிலை என்னவென்பது குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேலும் தெரிவித்துள்ளார்.