அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் அருகே கிராமத்திற்கு செல்லும் நடை மேம்பாலம் நேற்று இடிந்து விழுந்தது. இதனால், கிராமத்திற்கு செல்ல பாதையின்றி பொதுமக்கள் தவிக்கின்றனர். அலங்காநல்லூர் அருகே உள்ள அழகாபுரி கிராமத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த கிராமத்திற்கு செல்லும் பிரதான பாதையாக பெரியார்-வைகை பிரதான கால்வாயை கடக்கும் நடைபாதை மேம்பாலமாகும். இது கடந்த 1983ல் கட்டப்பட்டது. சில ஆண்டுகளாக இந்த பாலம் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்து வந்தது. இதனால் அதனை அகற்றிவிட்டு புதிய பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறைக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், இந்த பாலத்தின் ஒருபகுதி நேற்று திடீரென இடிந்து விழுந்தது. அப்போது பாலத்தில் யாரும் நடந்து செல்லவில்லை என்பதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் தற்போது கிராமத்திற்கு செல்ல பாதை வசதியின்றி பொதுமக்கள் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது. மாற்று வழியாக அவர்கள் சுமார் 4 கி.மீ சுற்றிச்செல்ல வேண்டியதாக இருக்கிறது. எனவே, இதே இடத்தில் உடனடியாக பெரிய அளவிலான பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்ை்க விடுத்துள்ளனர்.