வாஷிங்டன்: பஞ்சாபில் ‘வாரிஸ் பஞ்சாப் டி’ அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங் தீவிரவாத குழுவை அமைத்து வன்முறையில் ஈடுபட்டார். காலிஸ்தான் ஆதரவாளரான இவரை போலீஸார் கடந்த ஒரு வாரமாக தேடிவருகின்றனர். இதற்கு வெளிநாடுகளில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்திய தூரகங்களின் முன் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த வாரம் லண்டனில் உள்ள இந்திய தூரதகத்துக்குள் புகுந்து காலிஸ்தான் ஆதரவளர்கள் தேசியக் கொடியை அகற்றினர். கனடாவில் காந்தி சிலையையும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்தினர்.
அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோ நகரில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் கடந்த வாரம் ஞாயிற்றுகிழமை தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில் வாஷிங்டனில் உள்ள இந்திய தூரதகம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். இந்திய தூதர் தரண்ஜித் சிங் சாந்துவை திட்டி வெளிப்படையாக மிரட்டல் விடுத்தனர். வன்முறையை தூண்டும் விதத்தில் அவர்கள் பேசினர். தாக்குதல் நடத்துவதற்காக மர குச்சிகளையும் அவர்கள் கொண்டு வந்திருந்தனர்.
வன்முறை ஏற்படவுள்ளதை உணர்நத அமெரிக்க சீக்ரெட் சர்வீஸ் அமைப்பினர் உள்ளூர் போலீஸாரை உடனடியாக வரவழைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தினர். இதையடுத்து 3 போலீஸ் வேன்கள் தூதரகம் முன்பு நிறுத்தப்பட்டது. தூதரகத்தின் தேசிய கொடிக்கம்பத்தை நெருங்க முயன்ற போராட்டக்காரர்களை, சீக்ரெட் சர்வீஸ் வீரர்கள் அப்புறப்படுத்தினர்.
கனடா தூதருக்கு சம்மன்: கனடாவில் உள்ள இந்திய துணை தூதரகங்களுக்குள் புகுந்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் கடந்த வாரம் போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி டெல்லியில் உள்ள கனடா தூதரை அழைத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது. கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கும்படி வெளியுறவுத்துறை அமைச்சகம் வலியுறுத்தியது.
பிடிஐ செய்தியாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு போராட்டம் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள், அங்கு செய்தி சேகரிக்க சென்ற பிடிஐ நிருபர் லலித் கே ஜாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டல் விடுத்தனர். தகாத வார்த்தைகளால் திட்டினர். ஒருவர் தன் கையில் வைத்திருந்த காலிஸ்தான் கொடி குச்சியால், லலித் கே ஜாவை இடது காதில் தாக்கினார்.