கிருஷ்ணகிரி ராணுவ வீரர் பிரபுவை திமுக கவுன்சிலர் படுகொலை செய்ததை கண்டித்தும், பாஜக பட்டியல் அணி மாநிலத் தலைவர் தடா பெரியசாமியின் இல்லம் தாக்கப்பட்டதை கண்டித்தும், சென்னை சிவானந்தா சாலையில் கடந்த மாதம் 21 ஆம் தேதி தமிழக பாஜக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கர்னல் பாண்டியன், “ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சுடத் தெரிந்தவர்கள். நன்றாக வெடிகுண்டு வைக்கத் தெரிந்தவர்கள். இது போன்ற செயல் இனி நடைபெற்றால் நாங்கள் திமுகவுக்கு எதிராக வெடிகுண்டு வைப்போம்” என்று பேசி இருந்தார்.
என்னங்க குண்டு வைப்போம்னு மிரட்டல் விடுறிங்க என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு கூட அவர், ‘ஆம், மிரட்டல் இல்லை இது எச்சரிக்கை’ என்றார்.
இதனையடுத்து, பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் கர்னல் பாண்டியன் மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிய கர்னல் பாண்டியன், “இதுபோல் இனி பேச மாட்டேன் என உத்தரவாதம் அளித்து மனு தாக்கல் செய்தார்.
இதனையடுத்து, தமிழக அரசை மிரட்டும் விதமாக பேசிய ஓய்வு பெற்ற ராணுவ கர்னல் பாண்டியனுக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஒரு வாரம் சென்னையில் தங்கியிருந்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உள்ளது.