நாகர்கோவில்: இரட்டை ரயில் பாதை பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில், கன்னியாகுமரி – சென்னைக்கு வந்தே பாரத் ரயில் அறிவிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி அடுத்த மாதம் (ஏப்ரல்) 8-ம் தேதி சென்னைக்கு வருகை தந்து பல்வேறு ரயில்வே திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். இதில் முக்கியமாக சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் சேவை மற்றும் தாம்பரம் – செங்கோட்டை வாரம் மூன்று முறை ரயில் சேவையும் தொடங்கி வைக்க இருக்கின்றார். தமிழ்நாட்டில் இரண்டாவது வந்தே பாரத் ரயில் சென்னைக்கும் கோவைக்கும் இடையே இயக்கப்பட இருக்கிறது.
தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு வந்தே பாரத் ரயில்களில் ஒன்று, சென்னை – மைசூருக்கும், மற்றொன்று சென்னை – கோவைக்கு இயக்கப்பட்டுள்ளது. தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் கன்னியாகுமரி – சென்னைக்கு வந்தே பாரத் ரயில் அறிவிக்கப்பட வேண்டுமம் என தென் மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி முதல் சென்னை வரை உள்ள 740 கி.மீ வழித்தடத்தில் சென்னை – திருநெல்வேலி இடையே முழுவதும் மின்மயமாக்கல் உடன் கூடிய இரட்டை அகல ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள திருநெல்வேலி – மேலப்பாளையம் 3.6 கி.மீ மற்றும் ஆரல்வாய்மொழி – கன்னியாகுமரி 28.6 கி.மீ பாதை என மொத்தம் 32.2 மட்டும் ஒரு வழி பாதையாக உள்ளது. ஆகவே இந்த தடத்தில் வந்தேபாரத் ரயில் இயக்க போதிய வசதி வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு இயக்கினால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை , தேனி, திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மக்கள் மிகவும் பயன் பெறுவார்கள். ரயில்வே திட்டங்களை பொறுத்தவரை தென் மாவட்டம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
தென் மாவட்டங்களில் பெரிய விமான நிலையங்கள், ரயில்வே திட்டங்கள், சாலை போக்குவரத்து என பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மிகவும் குறைவாக உள்ளது. அதிக தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பு உள்ள சென்னை, கோவை, பெங்களூர், ஹைதராபாத் போன்ற இடங்களுக்கு புதிய ரயில்கள் தினசரி இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை கூட ரயில்வே துறை கண்டுகொள்ளவில்லை. கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு ஒரு ரயில் கூட தென் மாவட்டங்களுக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஆகவே பிரதமர் அவர்கள் இந்த விஷயத்தில் தலையீட்டு வந்தேபாரத் ரயிலை சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு இயக்குமாறு கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்தள்ளனர்.
சுதந்திரத்தின் அமிர்த பெருவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக காசி தமிழ் சங்கமம் -2022 நிகழ்ச்சி, உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்றது. காசிக்கும், தமிழகத்துக்கும் இடையிலான பண்டைய கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் அறிவு தொடர்பை மீண்டும் கண்டறியவும், கொண்டாடவும் வசதியாக வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நவம்பர் 16 முதல் டிசம்பர் 19ம் நாள் வரை என ஒரு மாதம் நடந்தது. இந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை முன்னிட்டு காசி தமிழ் சங்கமம் என்ற பெயரில் ரயில் இயக்க வேண்டும் என்று கடந்த மாதம் குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சார்பாக ரயில்வே துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற சிறப்புரையாற்றிய ரயில்வே அமைச்சர் இந்த விழாவை போற்றும் வகையில் காசி தமிழ் சங்கமம் என்ற பெயரில் தமிழ்நாட்டில் இருந்து வாரணாசிக்கு ரயில் இயக்கப்படும் என்று அறிவித்தார். இவ்வாறு அறிவிக்கப்பட்ட இந்த ரயிலை தினசரி ரயிலாக பிரதமர் கன்னியாகுமரி – காசிக்கு இயக்கப்படும் வகையில் தமிழ்நாட்டுக்கு வருகின்ற போது தொடங்கி வைக்க வேண்டும் என்றும் கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பயணிகள் சங்கத்தினர் கூறுகையில், கன்னியாகுமரி – காசி இடையிலான ரயிலுக்கு இட வசதி இல்லை என்று அதிகாரிகள் கூறினால், கன்னியாகுமரி திப்ருகார் ரயிலை கொச்சுவேலியுடன் நிறுத்தி கொள்ளலாம். கன்னியாகுமரி புனே தினசரி ரயிலை நாகர்கோவில் உடன் நிறுத்தி கொள்ளலாம்.
கொல்லம் – கன்னியாகுமரி மெமு ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும். புனலூர் – நாகர்கோவில் ரயிலை திருவனந்தபுரத்துடன் நிறுத்தி விட்டு அதற்கு பதிலாக திருநெல்வேலி – நாகர்கோவில் பயணிகள் ரயிலை திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும். நாகர்கோவில் – கோட்டயம் ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும். திருவனந்தபுரம் – நாகர்கோவில் பயணிகள் ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும். கன்னியாகுமரி மாவட்ட பயணிகளுக்கு பயன் இல்லாமல் இயங்கும் நாகர்கோவில் – ஷாலிமார் ரயிலை கொச்சுவேலியுடன் நிறுத்தி கொள்ளலாம் இது போன்று செய்தால், நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் இட வசதி இருக்கும் என்றனர்.