கடலூர் மாவட்ட நிலக்கரி சுரங்கங்கள் விரிவாக்க விவகாரத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பொய் பேசுவது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ள பசுமைத் தாயகம் மாநிலச் செயலாளர் இர. அருள் இதுகுறித்து ஆதாரங்களுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. நிறுவனம் 60 ஆயிரம் ஏக்கர் நிலம் எடுக்க போகிறது என்று பா.ம.க.வினர் கூறுகின்றனர். கீரப்பாளையம், புவனகிரி, பாளையங்கோட்டை, சேத்தியாத்தோப்பு, சோழத்தரம் ஆகிய பகுதிகளில் உள்ள விளை நிலங்களையும், வீராணம் ஏரியையும் என்.எல்.சி. நிர்வாகம் கையகப்படுத்த போகிறது என மக்களிடம் தவறான தகவலை தெரிவித்து வருகின்றனர்.
தற்போது ஆட்சியில் நாங்கள் தான் இருக்கிறோம். ஆனால் எங்களுக்கு தெரியாத தகவல்கள் எல்லாம் அவர்களுக்கு எப்படி தெரிகிறது என புரியவில்லை. எனவே இது வீண் வதந்தி” – என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
விளக்கம் : கடலூர் மாவட்டத்தில் சுமார் 78,000 ஏக்கர் பரப்பளவில் புதிய நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கும் 3 திட்டங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன. முதலாவதாக, 3ஆம் சுரங்கத் திட்டத்தை 12,125 ஏக்கரில் செயலாக்கும் பணிகள் நடைமுறையில் உள்ளன. அடுத்த மூன்றே ஆண்டுகளில் நிலக்கரி சுரங்கம் செயல்படத் தொடங்கும் என என்.எல்.சி நிறுவனம் அறிவித்துள்ளது. (என்.எல்.சி நிறுவனம் தற்போது நிலம் கையகப்படுத்த முயல்வது ஏற்கெனவே உள்ள சுரங்கத்தின் விரிவாக்கத்திற்காகத்தான். இதற்கு அடுத்தாக, இனிமேல்தான் புதிய திட்டத்திற்காக 26 கிராமங்களை கையகப்படுத்தும் நடைமுறை தொடங்கப்பட்டவுள்ளது).
அடுத்ததாக, 21000 ஏக்கரில் 20 கிராமங்களில் சேத்தியாத்தோப்பு கிழக்கு நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை தனியாருக்கு அளிப்பதற்கான ஏலத்தை 03.11.2022 அன்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மூன்றாவதாக, வீராணம் ஏரிக்கு சுற்றிலும் சுமார் 45000 ஏக்கர் பரப்பளவில் (182 சதுர கிலோமீட்டரில்) நிலக்கரி திட்டம் அமைப்பதற்கான ஆய்வினை என்.எல்.சி நிறுவனத்துக்காக எம்.இ.சி.எல் எனும் மத்திய அரசு நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இதற்காக சுமார் 571 ஆழ்துளை கிணறுகள் தோண்டப்பட்டு நிலக்கரி இருப்பு குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு புதிய நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பதற்கான திட்டங்கள் மிகத்தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதைத் தான், “வீண் வதந்தி” என்கிறார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்!
“வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.”
– இது திருக்குறள். “முன்கூட்டியே எச்சரிக்கையாக இருந்து ஒரு தவறான செயலைத் தவிர்த்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கையானது நெருப்பின் முன்னால் உள்ள வைக்கோல் போர் போலக் கருகிவிடும்.”
– இது கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் எழுதிய உரை : இதனை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அவர்கள் படித்து, கடலூர் மாவட்டத்தை அச்சுறுத்தும் நிலக்கரி சுரங்கத் திட்டங்களை தடுக்க முன்வர வேண்டும்.
புதிய நிலக்கரி சுரங்க திட்டங்கள் குறித்த ஆதாரங்கள்
கடலூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து வரவுள்ள அதிகாரப்பூர்வமான 3 புதிய நிலக்கரி சுரங்கத் திட்டங்கள் குறித்த ஆதாரங்கள் கீழே அளிக்கப்படுகிறது. இத்திட்டங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசின் ஒப்புதலுடன்தான் வரவுள்ளன
உண்மையிலேயே மாநில அரசுக்கு துணிச்சல் இருந்தால் – கடலூர் மாவட்டத்தில் புதிய நிலக்கரி திட்டங்கள் எதற்கும் அனுமதி அளிக்க மாட்டோம் என்று வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். கடலூர் மாவட்டத்தை புதிய நிலக்கரி சுரங்கங்கள் இல்லாத பகுதியாக அறிவிக்கும் சட்டத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்.
1. மூன்றாவது புதிய சுரங்கம் (Mine III)
கொளப்பாக்கம், அரசகுழி, சிறுவரப்பூர், உள்ளிட்ட 26 கிராமங்களில் உள்ள 12,125 ஏக்கர் நிலங்களில் சுரங்கம் 3 (Mine III) எனும் அடுத்த திட்டத்தை செயல்படுத்தும் பணிகள் நடந்துவருகின்றன. இந்தப் புதிய சுரங்கம் 2026ஆம் ஆண்டில் செயல்படத் தொடங்கும் என்று என்.எ.சி நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
ஆதாரம் 1: ரூ.3,755.71 கோடி மதிப்பீட்டில் இத்திட்டத்தை செயல்படுத்த 21.07.2022 அன்று NLC Board of Directors ஒப்புதல் அளித்துள்ளது.
ஆதாரம் 2: இந்திய பங்குச்சந்தை அமைப்புகளான National Stock Exchange of India Ltd & BSE Ltd ஆகியவற்றுக்கு 07.09.2022 அன்று NLC அளித்த சட்டப்படியான அறிக்கையில் புதிய மூன்றாவது சுரங்கம் 2026ஆம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வரும்வகையில் வேலைகள் நடந்துவருவதாக என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. சேத்தியாத்தோப்பு கிழக்குப் பகுதி நிலக்கரி சுரங்கம்.
புவனகிரிக்கும் சேத்தியாத்தோப்புக்கும் இடையே புவனகிரி, ஒரத்தூர், மஞ்சக்கொல்லை, மிராளூர், பின்னலூர், நத்தமேடு உள்ளிட்ட 20 கிராமங்களின் 21000 ஏக்கர் நிலப்பரப்பில் “சேத்தியாத்தோப்பு கிழக்கு நிலக்கரி சுரங்கம் (East of Sethisthope Lignite Block)” எனும் புதிய சுரங்கத்தை தனியார்துறை மூலம் அமைக்க மத்திய அரசு ஏலம் அறிவித்துள்ளது.
ஆதாரம் 1: மத்திய நிதியமைச்சர் 03.11.2022 அன்று இந்தியாவில் 141 சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் திட்டத்தை அறிவித்தார். அதில் “சேத்தியாத்தோப்பு கிழக்கு நிலக்கரி சுரங்கம்” திட்டம் இடம் பெற்றுள்ளன.
ஆதாரம் 2: மத்திய நிலக்கரி அமைச்சர் 21.12.2022 நடாளுமன்றத்தில் அளித்த எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் 141 நிலக்கரி சுரங்கங்கள் ஏலத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். அந்தப் பட்டியலில் 131ஆவது சுரங்கமாக East of Sethisthope Lignite Block உள்ளது.
ஆதாரம் 3: இந்திய அரசின் நிலக்கரி சுரங்க ஏலத்திற்கான இணையதளத்தில் East of Sethisthope Lignite Block திட்டம் வரைபடத்துடன் விளக்கப்பட்டுள்ளது,
3. வீராணம் நிலக்கரி திட்டம் & பாளையம்கோட்டை நிலக்கரி திட்டம்
வீராணம் ஏரியில் தொடங்கி, அதற்கு மேற்கே உள்ள பகுதிகளில் வீராணம் நிலக்கரி திட்டம் & பாளையம்கோட்டை நிலக்கரி திட்டம் ஆகிய திட்டங்களை செயல்படுத்துவதற்கான துரப்பண ஆய்வுகளை எம்.இ.சி.எல் (MECL) நிறுவனத்தின் மூலம் என்.எல்.சி இந்தியா நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
ஆதாரம் 1: இந்திய அரசின் National Mineral Exploration Trust (NMET) 21.02.2017 அன்று இந்தியாவில் 39 துரப்பண ஆய்வுகளுக்கு அனுமதி அளித்தது. அதில் NLC இந்தியா நிறுவனத்துக்காக Veeranam Lignite Block & Palayamkottai Lignite Block ஆகிய துரப்பண ஆய்வு திட்டங்களை ரூ.78.93 கோடியில் MECL நிறுவனம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
ஆதாரம் 2: MECL நிறுவனம் முறையே வீராணம் நிலக்கரி திட்டம் 1 என்பதன் கீழ் 146 ஆழ்துளை கிணறுகள், வீராணம் நிலக்கரி திட்டம் 2 என்பதன் கீழ் 181 ஆழ்துளை கிணறுகள், பாளையம்கோட்டை நிலக்கரி திட்டம் என்பதன் கீழ் 149 ஆழ்துளை, கிணறுகளை அமைத்து வீராணம் பகுதியில் பழுப்பு நிலக்கரி இருப்பதை உறுதி செய்துள்ளனர்.
ஆகமொத்தம், 2020 ஆம் ஆண்டுவரை 476 ஆழ்துளை கிணறுகளை அமைத்து ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வுகள் மூலம் இந்தப் பகுதிகள் அனைத்திலும் பழுப்பு நிலக்கரி இருக்கிறது என்பதை ஆய்வுபூர்வமாக உறுதி செயதுள்ளனர்.
(குறிப்பு: வீராணம் நிலக்கரி திட்டம் 1 & 2 ஆகிய இரண்டுக்கும் சேர்த்து 2020ஆம் ஆண்டு வரை 327 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இதன் 3 & 4 திட்டங்களுக்கும் சேர்த்து தற்போது 422 ஆழ்துளை கிணறுகள் இருப்பதாக தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. எனவே, அதனுடன் பாளையம்கோட்டை நிலக்கரி திட்டத்தையும் சேர்த்தால் ஆக மொத்தம் 571 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டிருக்கலாம்)
ஆதாரம் 3: MECL நிறுவனம் ஆழ்துளை குழாய்கள் அமைத்து வீராணம் பகுதியில் ஆய்வு நடத்தும் திட்டத்தை இதுவரை கைவிடவில்லை.
தற்போதைய நிலை என்ன?
மூன்றாவது புதிய சுரங்கம் (Mine III), சேத்தியாத்தோப்பு கிழக்குப் பகுதி நிலக்கரி சுரங்கம், வீராணம் நிலக்கரி திட்டம் & பாளையம்கோட்டை நிலக்கரி திட்டம் – ஆகிய திட்டங்களை செயலாக்கும் முயற்சிகள் எதுவும் கைவிடப்படவில்லை.
மூன்றாவது புதிய சுரங்கம் (Mine III) திட்டத்தை செயல்படுத்த மாட்டோம். கைவிடுகிறோம் என்று என்.எல்.சி இந்தியா நிறுவனம் அறிவிக்கவில்லை.
சேத்தியாத்தோப்பு கிழக்குப் பகுதி நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவிக்கவில்லை.
வீராணம் நிலக்கரி திட்டம் & பாளையம்கோட்டை நிலக்கரி திட்டத்திற்கான ஆய்வுகளை கைவிடுவதாக எம்.இ.சி.எல் நிறுவனம் அறிவிக்கவில்லை.
மூன்று புதிய நிலக்கரி திட்டங்களையும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றோ, கடலூர் மாவட்டத்தில் புதிய நிலக்கரி திட்டங்கள் எதற்கும் அனுமதி அளிக்க மாட்டோம் என்றோ – தமிழ்நாடு அரசு கொள்கை முடிவு எதையும் அறிவிக்கவில்லை. கடலூர் மாவட்டத்தை புதிய நிலக்கரி சுரங்கங்கள் இல்லாத பகுதியாக அறிவிக்கும் சட்டத்தை கொண்டுவரும் திட்டம் எதுவும் தமிழ்நாடு அரசுக்கு இதுவரை இல்லை.
இவ்வாறான சூழலில், கடலூர் மாவட்டத்தை அச்சுறுத்தும் நிலக்கரி சுரங்கத் திட்டங்கள் குறித்த எச்சரிக்கையை மக்களுக்கு எடுத்துச்சொல்லும் கடமை பொதுநலனில் அக்கறை உள்ள அனைவருக்கும் இருக்கிறது. மனித உரிமை கண்ணோட்டத்தில் இதனை whistleblowing என்கின்றனர். இவ்வாறு, வருமுன்னரே விடுக்கப்படும் எச்சரிக்கையைதான் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் “வீண் வதந்தி” என்று சொல்கிறார்!
இவ்வாறு அந்த அறிக்கையில் இர. அருள் தெரிவித்துள்ளார்.
குறிப்பு: விரிவான ஆதாரங்கள் படத்துடன் பின்இணைப்பாக அளிக்கப்பட்டுள்ளன. www.bit.ly/ReplyToMRK