புதுடெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 1,890 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்புகள் சீராக குறைந்து வந்த நிலையில், கடந்த சில வாரங்களாக தொற்று எண்ணிக்கை கொஞ்சம்,கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தினசரி கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்தை நெருங்கியுள்ளது மக்களை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 1,890 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கடந்த 149 நாட்களில் நாட்டில் முதல்முறையாக அதிகளவு கொரோனா பதிவாகியுள்ளது. தற்போது இதுவரை 9,433 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இந்தியாவில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதில்,மகாராஷ்டிரா, குஜராத்தில் தலா 2 பேரும், கேரளாவில் 3 பேரும் பலியாகி உள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 5,30,831 ஆக அதிகரித்துள்ளது என ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
