கொடைக்கானல்/பெரியகுளம்: கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த மழையால் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை உள்ளிட்ட பல அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், கும்பக்கரை அருவியில் சிக்கிய 30 பேரை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு மாதமாக வெயில் வாட்டி வந்த நிலையில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று பகல் 1 மணியளவில் கனமழை பெய்தது. சுமார் 3 மணிநேரம் நீடித்த கனமழை காரணமாக ெகாடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்டக்கானல் அருவி, கரடிச்சோலை அருவி உள்ளிட்ட அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கொடைக்கானலுக்கு நேற்று வார விடுமுறையை கொண்டாட வந்த சுற்றுலா பயணிகள் இந்த வெள்ளப்பெருக்கை கண்டு ரசித்தனர். இதனிடையே, தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவிக்கு வார விடுமுறையான நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க வந்தனர். கொடைக்கானல் மற்றும் வட்டக்கானல் பகுதியில் பெய்த கனமழையால், அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் அருவியில் குளித்து கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளை விரைவாக அப்புறப்படுத்தினர்.
அப்போது, அருவியின் வடக்கு பகுதிக்கு சென்ற 30 பேர் திரும்ப முடியாமல் சிக்கிக் கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. வனச்சரகர் டேவிட் தலைமையிலான வனத்துறையினர் அவர்களை பத்திரமாக மீட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். இந்த வெள்ளப்பெருக்கினால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், பாதுகாப்பு கருதி நீர்வரத்து சீராகும் வரை, கும்பக்கரை அருவியில் குளிக்க தடை விதிப்பதாக தேவதானப்பட்டி வனச்சரகர் டேவிட்ராஜ் தெரிவித்துள்ளார்.