தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அருகேயுள்ள வகுத்தானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கம்மாள் என்கிற புனிதவதி (56). இவர், பாளையம்புதூர் அரசு மருத்துவமனையில் தற்காலிகப் பணியாளராகப் பணியாற்றி வந்தார். அங்குப் பணியைவிட்டு நின்ற புனிதவதி, சில மாதங்களாகத் தனது கிராமத்திலுள்ள, கர்ப்பிணிகளிடம் கருவிலுள்ள குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்து சொல்வதாகக் கூறி, கல்லா கட்டி வந்திருக்கிறார். புனிதவதிக்கு, கருவிலிருக்கும் குழந்தையைக் கண்டறிய, கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மருந்துக்கடை நடத்தி வரும் கவியரசன் (28), அவரின் நண்பர் ஐயப்பன் (43) ஆகியோர் பல மாதங்களாக உதவி வந்திருக்கின்றனர்.
இந்த நிலையில், இது குறித்து ரகசிய தகவல் தெரிந்த, அரூர் அரசு மருத்துவமனை வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஸ் கண்ணா தலைமையிலான குழுவினர் நேற்று, வகுத்தானூரிலுள்ள புனிதவதி வீட்டில் திடீர் சோதனை செய்தனர். அப்போது, அங்கு கருவிகளை வைத்து, ஒரு பெண்ணிடம் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிய முயன்றது தெரியவந்தது. அதையடுத்து மூவரையும் கையும் களவுமாகப் பிடித்த மருத்துவக் குழுவினர், மொரப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர்.
சட்ட விரோதமாகப் பாலினத்தை தெரிவித்த குற்றத்துக்காக, புனிதவதி, கவியரசன், அய்யனார் ஆகியோரை போலீஸார் கைதுசெய்தனர். விசாரணையில், இவர்கள் மூவரும் இணைந்து, கருவிலுள்ள சிசுவின் பாலினத்தைக் கண்டறிவதற்காக பெண்களிடம் தலா, 30,000 ரூபாய் வரைப்பெற்று, பெண் சிசுக்களை கருக்கலைக்க அறிவுரையும் வழங்கி வந்த, அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது. கைதுசெய்யப்பட்ட மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதிலும் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கண்டறிய, மருத்துவக் குழுவினர் திட்டமிட்டிருக்கின்றனர்.