சென்னை: கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்துகிறது. தமிழகத்தில் தற்போது கரோனா தொற்றால் அச்சப்பட வேண்டிய சூழல் இல்லை என்று தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ஒற்றை இலக்கத்தில் பதிவாகி வந்த தினசரி கரோனா தொற்று, கடந்த ஒரு மாதமாக இரட்டை இலக்கத்தில் பதிவாகி 100-ஐ நெருங்கியுள்ளது.
தமிழகம் போலவே குஜராத், மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் கரோனா தொற்று பாதிப்புஅதிகரித்து வருகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை: எனவே, கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, ஆர்டி-பிசிஆர் எனும் கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். படுக்கைகளை தயார் நிலையில் வைக்க வேண்டும். மருந்துகளை போதிய அளவில் இருப்பில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தமிழகத்தில் எக்ஸ்பிபி மற்றும் பிஏ2 வகை கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. அதனால், மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை பொது சுகாதாரத் துறை வழங்கி வருகிறது. அதன்படி சென்னை, கோவை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், கரோனாபாதிப்பு மற்றும் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிந்து கொள்வதற்காக, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுடன் மத்திய சுகாதாரத் துறை இன்று ஆலோசனை நடத்துகிறது.
காணொலி மூலம் ஆலோசனை: டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷண் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் சென்னையில் இருந்து சுகாதாரத் துறை செயலர் ப.செந்தில்குமார், பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது: தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், மத்திய சுகாதாரத் துறை செயலர் ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் கரோனா தடுப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்கள், பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கரோனாஅறிகுறிகளின் அடிப்படையில் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.
தமிழகத்தில் பொது சுகாதாரத் துறை வளாகத்தில் (டிபிஎச்) மரபணு பகுப்பாய்வு ஆய்வகம் அமைக்கப்பட்ட பிறகு, கரோனா வைரஸ் வகையை அறிவதற்கான ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.
தமிழகம் முழுவதும் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை சேர்ந்த நோயாளிகளின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மரபணு பகுப்பாய்வு செய்யப்படுகிறது. அதன் முடிவுகளை வைத்துப்பார்க்கும்போது, தமிழகத்தில் தற்போது கரோனா தொற்றால் அச்சப்பட வேண்டிய சூழல்இல்லை.
எனினும், மத்திய அரசு வழிகாட்டுதலின்படி நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
புதிதாக 99 பேருக்கு தொற்று: இதற்கிடையே, தமிழகத்தில் நேற்று ஆண்கள் 45, பெண்கள் 54 என மொத்தம் 99 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் 26 பேருக்கும், கோவையில் 21 பேருக்கும், செங்கல்பட்டில் 15 பேருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பஹ்ரைனில் இருந்து வந்த ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
நேற்று மட்டும் 73 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழகம் முழுவதும் 608 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று உயிரிழப்பு இல்லை என்று தமிழக சுகாதாரத் துறையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.