புதுடெல்லி: குடிமைப் பணிக்கு தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்கும் நடைமுறைக்கு 15 மாதங்கள் ஆகிறது. இது நீண்ட நெடிய தேர்வு நடைமுறையாக உள்ளது. இதனால், மாணவர்களின் பொன்னான காலம் வீணடிக்கப்படுகிறது.
அத்துடன் குடிமைப் பணி தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் மனதளவிலும், உடல்அளவிலும் சோர்வை சந்திக்கின்றனர். இதனால், அவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, சிவில் சர்வீஸ் எனப்படும் குடிமைப் பணிக்கான தேர்வு, சுழற்சி நடைமுறைகளின் காலத்தை கணிசமாக குறைக்குமாறு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடம் (யுபிஎஸ்சி) நாடாளுமன்றக் குழு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள், சட்டம் மற்றும் நீதி தொடர்பான துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு கூறியுள்ளதாவது:
சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான தேர்வில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதற்கான காரணங்களை கண்டறிய யுபிஎஸ்சி விரிவான முறையில் ஆய்வு நடத்த வேண்டும்.
இந்திய நிர்வாகப் பணி (IAS), இந்திய வெளியுறவுப் பணி (IFS) மற்றும் இந்தியக் காவல் பணி (IPS) உள்ளிட்ட அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்க, யுபிஎஸ்சி ஆண்டுதோறும் மூன்று நிலைகளில் அதாவது முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு நடத்துகிறது.
யுபிஎஸ்சி வழங்கிய தரவுகளின்படி, சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான சராசரி நேரம் என்பது அறிவிப்பு வெளியான நாளிலிருந்து இறுதி முடிவு அறிவிக்கப்படும் தேதி வரை கிட்டத்தட்ட 15 மாதங்கள் ஆகிறது. இது, தேர்வு எழுதிய மாணவர்களிடையே மனதளவில் அயற்சியை ஏற்படுத்துகிறது.
தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுவதால் இடைப்பட்ட காலத்தில் மாணவர்கள் வேறு எந்த முயற்சிகளும் மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. தேர்வு முடிவுகளை பொறுத்து அடுத்தகட்ட செயல்பாடுகளை மாணவர்கள் திட்டமிடுவதால் பல மாதங்கள் காத்திருக்கும் நிலை உள்ளது. எந்தவொரு ஆட்சேர்ப்புத் தேர்வின் கால அளவும் பொதுவாக ஆறு மாதங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இதனை கருத்தில் கொண்டு தரத்தில் சமரசம் செய்யாமல் ஆட்சேர்ப்பு சுழற்சியின் காலத்தை கணிசமாகக் குறைக்க யுபிஎஸ்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.