புதுடெல்லி: தனக்கு எதிரான வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து முன்னாள் சிலை கடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழக கோயில்களில் இருந்து மாயமான பழமையான சிலைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தமிழ்நாடு அரசு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜ.யாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டிருந்தார். அப்போது சர்வதேசக் கடத்தல் கும்பலோடு கூட்டுச் சேர்ந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சாமி சிலைகளை கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட திருவள்ளூர் டிஎஸ்பியாக இருந்த காதர்பாஷா பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
தன்னை பழிவாங்கும் நோக்கில் தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவுசெய்த சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யக் கோரி பணியிடைநீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி காதர் பாஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் முன்னாள் ஐஜி, பொன் மாணிக்கவேல் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து பொன். மாணிக்கவேல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா முராரி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன்.மாணிக்கவேல் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நாகமுத்து, “காணாமல்போன, சில சிலைகள் மீட்கப்பட்டன. தற்போதும் அந்த வழக்குகள் நடந்து வருகிறது. ஆனால் தன்மீது குற்றம்சாட்டிய காதர்பாட்ஷா ஒரு போலீஸ் அதிகாரி. அவர்மீது சிலை கடத்தல் தொடர்பாக பல குற்றச்சாட்டுகள் உள்ளன.
சிலை கடத்தல் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட அவர், காழ்ப்புணர்ச்சி காரணமாக தன்மீது அவதூறு பரப்பி இதுபோன்ற தவறான குற்றச்சாட்டை வைத்துள்ளார். அவரது புகாரை கேட்டு உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஓய்வு பெற்ற பின்னரும்கூட, தனது நேர்மையை கருத்தில்கொண்டு, சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க உயர்நீதிமன்றம் தன் பணி காலத்தை நீட்டித்ததிருந்தது. ஆனால், இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் முழுமையான விசயங்களை கருத்தில் கொள்ளமால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. எனவே சிபி ஐ விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்.மேலும் தனக்கு எதிராக உயர்நீதிமன்ற பதிவு செய்துள்ள சில கருத்துக்களை நீக்க வேண்டும்” என வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை முழுமையாக ஏற்க மறுத்த நீதிபதிகள், சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டதை எதிர்த்து பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்துகளை நீக்க கோரும் கோரிக்கை தொடர்பாக பொன்.மாணிக்கவேல் , சென்னை உயர்நீதிமன்றத்தை நாடலாம் எனவும், அந்த மனுவை மெரிட் அடிப்படையில் விசாரித்து உயர்நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்கலாம்” எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.