இன்று சென்னை மாநகராட்சியில் நடப்பாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில், கல்வித்துறைக்கு ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் விவரம் பின்வருமாறு:- “அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், செய்முறை வகுப்புகளை சிறப்பாக நடத்துவதற்கு ஆய்வகங்களின் கட்டமைப்புகள் படிப்படியாக மேம்படுத்தப்படும்.
சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்கள் முக்கிய அறிவிப்புகளை அறிவிப்பதற்கும், அனைத்து பகுதிகளில் உள்ளவர்களையும் உடனடியாக தொடர்பு கொள்வதற்கு வசதியாக ‘பப்ளிக் அட்ரஸ் சிஸ்டம்’ அமைத்து தரப்படும்.
பழுதடைந்துள்ள பள்ளிக்கட்டிடங்களை மறுசீரமைப்பதற்கு ரூ.25 கோடி ஒதுக்கப்பட உள்ளது. மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுதுவதற்கு ஆலோசனை வழங்க அனைத்து மண்டலங்களிலும் ரூ.30 லட்சம் செலவில் ஆலோசகர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள்.
இசை ஆசிரியர்கள் உள்ள இருபது பள்ளிகளுக்கு இசைக் கருவிகள் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் ரூ.27.17 லட்சம் செலவில் தானியங்கி மணி அமைக்கப்படும்.
தேர்ச்சி விகிதத்தை உயர்த்தும் வகையில் பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டில் அவித்த சுண்டல், பயிறு வகைகள் ரூ.1 கோடி செலவில் வழங்கப்படும்” என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.