சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்ய மறுத்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்த எஸ்.பி. வேலுமணி சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் பல்வேறு அரசுப் பணிகளுக்கு முறைகேடுகளாக டெண்டர் விட்டதாகவும், அதற்கு பிரதிபலனாக சுமார் 58 கோடி ரூபாய் அளவிற்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் அறப்போர் இயக்கம் மற்றும் தி.மு.க.வின் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் புகார் அளித்திருந்தனர். இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரால், எஸ்.பி. வேலுமணி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வேலுமணிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை ரத்துசெய்ய மறுத்தது. அதேவேளையில் டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது என்று உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக எஸ்.பி.வேலுமணியும், டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்த உத்தரவிற்கு எதிராக தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
அந்த வழக்கு உச்சநீமன்றத்தில் நீதிபதி அஜய் ரஸ்தோஹி தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்.பி.வேலுமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இந்த வழக்கு வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக பதியப்பட்ட ஒன்று என்றும், மேலும் இந்த வழக்கில் வருமானத்துக்கு அதிகமாக 58 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து குவிக்கப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார்கள் எனவும், ஆனால் அது தொடர்பான எந்த விவரமும் இல்லை என்றும், சொத்து, கட்டடம், வீடு என எந்த சொத்தின் விவரமும் வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் இல்லை என்றும் கூறினார்.
ஆதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், எஸ்.பி வேலுமணி மீதான வழக்கு முறையான ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை செய்யப்பட்டு அதனடிப்படையில் பதிவு செய்யப்பட்டது என்றும், எனவே இதில் அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறுவதை ஏற்க முடியாது எனவும் தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதிகள், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையால் தான் எஸ்.பி.வேலு மணி மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதியப்பட்டது என்ற வாதத்தை ஏற்க மறுப்பதாக தெரிவித்ததோடு, சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரிய எஸ்.பி.வேலுமணியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM