சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு சர்ச்சை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு தமிழக நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்தார்.
இபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்: தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் விவசாய பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக சர்ச்சை எழுந்துள்ளது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கள்கிழமை) கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.
அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் குறிப்பிட்ட சில பயிற்சி மையங்களில் பயின்ற அடுத்தடுத்த பதிவெண் கொண்ட தேர்வர்கள் வெற்றியடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் பயின்ற 700க்கும் மேற்பட்ட தேர்வர்கள் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். தென்காசியில் ஒரு பயிற்சி மையத்தைச் சேர்ந்த 2000 பேர் தேர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
குரூப் 4 தேர்வு விவகாரத்தில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளது. இது குறித்து அரசு உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்துள்ள விவகாரம் தேர்வர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.
அமைச்சர் பதில்: இதற்கு சட்டப்பேரவையில் பதிலளித்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “குரூப் 4 நில அளவர் தேர்வு முறைகேடு என்ற புகார் எழுந்தவுடனேயே அது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. தேர்வில் முறைகேடு ஏதும் நடந்துள்ளதா என்பது பற்றி மனித வள மேம்பாட்டுத்துறைச் செயலரின் வாயிலாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. உரிய விளக்கம் பெற்ற பின்னர் அது பற்றி பேரவையில் தெரிவிக்கப்படும். குழப்பங்கள் நடைபெற்றிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இந்நிலையில் சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகம் முன்னர் 40க்கும் மேற்பட்ட தேர்வர்கள் குவிந்துள்ளனர். தங்களின் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை என்றும் தங்களது விடைத்தாள்கள் திருத்தத் தகுதியற்றவை என்று தெரிவிக்கபட்டுள்ளது என்பதாலும் அதுபற்றி விளக்கம் கோரி மனு கொடுக்கவந்ததாகத் தெரிவித்தனர்.