எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து டெல்லியில் உள்ள அரசு இல்லத்தை காலி செய்யுமாறு ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தல் பரப்புரையின் போது, மோடி சமூகத்தினரை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. உடனடியாக அவருக்கு ஜாமீன் கிடைக்கப்பெற்ற நிலையிலும் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை அடுத்து, எம்.பி பதவியில் இருந்து, அவர் தகுதி இழப்பு செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்தது. இதைக் கண்டித்து, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஒருபக்கம் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும், ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதை கண்டித்து, காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து இரண்டு அவைகளிலும் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தார்கள். இந்நிலையில், மக்களவை உறுப்பினர் என்ற வகையில், ராகுல் காந்திக்கு அரசு இல்லம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், டெல்லியில் உள்ள அரசு இல்லத்தை காலி செய்யுமாறு ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM