சிவகங்கை/காரியாபட்டி: சிவகங்கை அருகே தமராக்கியில் மஞ்சுவிரட்டு மற்றும் காரியாபட்டி அருகே ஆவியூரில் நடந்த மஞ்சுவிரட்டில் திமிலை உயர்த்தி திமிறிய காளைகளை, மாடுபிடி வீரர்கள் தீரத்துடன் அடக்கி பரிசுகளை வென்றனர். சிவகங்கை அருகே, தெற்கு தமராக்கி கிராமத்தில் கலியுகவரத அய்யனார், ஏழை காத்த அம்மன், மந்தை கருப்பண சாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 800க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர்.
காளைகள் முட்டியதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் ஏட்டு கிரிவாசன் (40) காயமடைந்தார். மேலும் 45 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு மைதானம் அருகே அமைக்கப்பட்டிருந்த மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், வீரர்களுக்கும் கட்டில், பீரோ, சைக்கிள் உள்ளிட்ட பொருட்களுடன் பூச்சி மருந்து ஸ்பிரேயர், ட்ரில்லர் உள்ளிட்ட விவசாய கருவிகளும் கிராம மக்கள் சார்பில் பரிசாக வழங்கப்பட்டது.
ஆவியூரில் அனல் பறந்த ஜல்லிக்கட்டு
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே ஆவியூரில் கருப்பண்ணசாமி கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஆவியூர் வடக்கு தெரு பங்காளிகள் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை 8 மணிக்கு வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து மற்ற காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. மொத்தம் 700க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்கினர். பல காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் வெற்றி பெற்றது.
ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் டூவீலர், வெள்ளி நாணயம், தங்க நாணயம், சைக்கிள், வாசிங் மிஷின், பீரோல், எல்இடி டிவி, குக்கர், மிக்சி, மின் விசிறி, கட்டில், அயன்பாக்ஸ், சில்வர்பாத்திரம், பணம், வேட்டி, அண்டா போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் இந்த போட்டியில் காளைகள் முட்டியதில் 55 பேர் காயமடைந்தனர். அதில் 9 பேர் படுகாயமடைந்தனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கு அருப்புக்கோட்டை உதவி காவல் கண்காணிப்பாளர் கரூண் காரட் உத்தராவ் தலைமையில் சுமார் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.