தொடர்ந்து நடைபெற்று வரும் சம்பவங்களை தொகுத்து திமுகவிற்குள் ஆர்எஸ்எஸ் நபர்கள் ஊடுருவுவதாக அரசியல் நோக்கர்களும், திராவிட ஆதராவாளர்களும் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.
தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டின் கீழ் தான் போலீஸ் உள்ளதா, அல்லது ஆர்எஸ்எஸ் நபர்களால் தமிழ்நாடு காவல்துறை இயங்குகிறதா என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்
சமீப காலமாக கேள்வி எழுப்பி வருகிறார். அந்தவகையில் தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சம்பவங்களை தொகுக்கும் அரசியல் நோக்கர்கள், திமுகவிற்குள் ஆர்எஸ்எஸ் ஊடுருவல் உள்ளதாக கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
சம்பவம் 1
சிலநாட்களுக்கு முன்பு கலைஞர் தொலைக்காட்சி குழுமத்திற்கு சொந்தமான சித்திரம் தொலைக்காட்சியில் மாணவர்களிடையே அரசியல் பேசும் நிகழ்ச்சி ஒன்றில் பாஜக நிர்வாகி வினோஜ் பி செல்வம் பேசியுள்ளது திராவிட இயக்க ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திராவிடம் மற்றும் இஸ்லாமியத்திற்கு எதிராகவும், தமிழ்நாட்டை ஆன்மீக பூமி என்றும் அரசியலில் ஆன்மீகத்தை சேர்ப்பது பற்றியும் வினோஜ் பி செல்வம் பேசியதாக மாணவர்கள் கூறிய காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. மதநல்லிணக்கத்தை கற்க வேண்டிய மாணவப் பருவத்தில், மதச்சார்பை பேசும் இந்துத்துவ கொள்கைகளைப் பரப்ப பாஜகவினரால், அதுவும் கலைஞர் குழும தொலைக்காட்சி ஒன்றிற்குள்ளே எளிதாக வர முடிகிறது என்பதை அரசியல் விமர்சகர்களும், திராவிட ஆதரவாளர்களும் கேள்வி எழுப்பினர்.
கல்வி தொலைக்காட்சியில் ஆர்எஸ்எஸ்
கடந்த ஆண்டு தமிழ்நாட்டின் கல்வித் தொலைக்காட்சியின் தலைமைச் செயல் அதிகாரியாக (CEO) தீவிர ஆர்எஸ்எஸ் நபரான சாணக்கியா யூட்யூப் சேனல் ரங்கராஜ் பாண்டேயின் நண்பரும், பங்குதாரருமான மணிகண்ட பூபதி நியமிக்கப்பட்டதான அறிவிப்பு பல அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
இந்தப் பதவிக்கு தகுதியான திறமை மிக்க எத்தனையோ பேர்கள் இருக்க தீவிர RSS நபரான, அதுவும் முதல் முறையாக பள்ளிக்கல்வித் துறையைச் சாராத ஒருவர் முதன்மை செயல் அலுவராக எந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படலாம் என்று பல சர்ச்சைக்குரல் எழுந்ததும் அவரது நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. ஆர்எஸ்எஸ் நபர் நியமனம் குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கூறும்போது, ரங்கராஜ் பாண்டே தனது நண்பர் என கூறியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பள்ளிகளில் ஆர்எஸ்எஸ் சகா
கோவை ஆர்எஸ் புரம் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியின் வளாகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மேற்கொண்ட பயிற்சி குறித்த புகைப்படம், காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அரசு பள்ளி வளாகங்களில் இது போன்ற தனியார் அமைப்பின் செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது எனும் போது, மாநகராட்சி பள்ளி வளாகத்திலே ஆர்எஸ்எஸ் பயிற்சி தொடர்ந்து பல மாதங்களாக நடைபெற்று வந்ததும், மாநகராட்சி நிர்வாகம் அதை கண்டுகொள்ளாமல் இருந்ததும் தெரியவந்தது. இதை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் தோழர் கு.ராமகிருட்டிணன் தலைமையில் பள்ளி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.
கள்ளக்குறிச்சி விவகாரம்
கள்ளக்குறிச்சி பள்ளியில் மர்மமான முறையில் மாணவி ஸ்ரீமதி இறந்ததற்கு காரணமான பள்ளியின் தாளாளர் ஆர்எஸ்எஸ்ஐச் சேர்ந்தவர் என்பதற்காக மாணவி இறந்து 5 நாட்களாக மக்கள் பல்வேறு போராட்டம் நடத்தியும் கல்வி அமைச்சகம் அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் அன்பில் மகேஷ் டார்கெட்.?
திமுகவை அதன் தலைவர்களை கீழ்த்தரமாக விமர்சித்து வரும் பாஜகவைச் சேர்ந்த தேன்மொழி எழில், அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கியுள்ளார். இது திமுகவினர் மத்தியிலேயே அதிருப்தியை உண்டாக்கியது.
ஏற்கனவே பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கள்ளக்குறிச்சியில் மாணவி மரணத்தில் ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்ட பள்ளிக்கு சாதகமாக பேசியதும், சுமார் 1 கோடி மாணவர்களின் நலனை கருத்தில்கொள்ளாது ஆர்எஸ்எஸ் நபரை உயர் பதவியில் அமர வைத்தது, பள்ளிகளில் ஆர்எஸ்எஸ் பயி்ற்சி நடத்த அனுமதிப்பது, கலைஞர் தொலைக்காட்சி வழியாக இந்துத்துவ சிந்தனைகளை புகுத்துவது உள்ளிட்ட காரணிகளால் அவர் மீது அரசியல் நோக்கர்கள் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.