தென் இந்தியாவில் முதல் முறையாக சங்கரன்கோவில் அருகே 120 அடி உயர உலக அமைதி கோபுரத்தில் புதியதாக புத்தர் சிலைகள் அமைப்பு: புத்த துறவிகள் பங்கேற்பு

சங்கரன்கோவில்: தென்னிந்தியாவில் முதல் முறையாக சங்கரன்கோவில் அருகே 120 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள உலக அமைதி கோபுரத்தில் பிரம்மாண்டமான புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் பல்வேறு போர்களை தொடுத்த பேரரசர் அசோகர் தனது கடைசி போரான கலிங்கத்து போரை நடத்திய பின் போர்களை கைவிட்டு உலக அமைதிக்காக கவுதம புத்தரின் வழியை பின்பற்றி உலககெங்கும் புத்த அமைதி கோபுரங்களை நிறுவி உலகில் அமைதியை உருவாக்க முயன்றார். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு புத்தரின் போதனையை காந்தி பின்பற்றி அகிம்சை வழியை கடைப்பிடித்ததே முக்கிய காரணம்.

கடந்த 20ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த புத்த துறவி நிட்சு தட்சு பியூஜீ குருஜீ என்பவர் உலகத்தில் அமைதி நிலவ உலகெங்கிலும் புத்த அமைதி கோபுரங்களை உருவாக்க முயன்றார். இந்தியாவில் நேரு உதவியுடன் தாமரை சூத்திரத்தை புத்தர் முதன்முதலில் உபதேசம் செய்த பீகார் மாநிலம் இராஜ்கீர் மலையில் புத்த அமைதி கோபுரத்தை அமைத்தார். இதனை அப்போதைய ஜனாதிபதி வி.வி.கிரி திறந்து வைத்தார். இதனைத்தொடந்து 6 வட மாநிலங்களில் கோபுரங்கள் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் தென்னிந்தியாவில் உலக அமைதி கோபுரத்தை நிறுவ தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வீரிருப்பு கிராமத்தை சேர்ந்த முத்தையா என்பவர் கடந்த 2000ம் ஆண்டு புத்தர் கோயில் கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார். அந்த இடம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளதால் அமைதியான சூழலில் கோயில் கட்ட ஏதுவாக அமைந்தது. இதனை தொடர்ந்து நிப்போசன் மியொ ஹொஜி தமிழ்நாடு மற்றும் புத்த துறவிகள் சார்பில் இங்கு கோயில் கட்டப்பட்டது.

தென்னிந்தியாவில் முதல்முறையாக 120 அடி உயரத்தில் கட்டப்பட்ட உலக அமைதி கோபுரத்தின் உச்சியில் கடந்த 2020 மார்ச் 4ம்தேதி புத்தரின் அஸ்தி வைக்கப்பட்டது. 3 ஆண்டுகால இடைவெளிக்குப் பின் நேற்று உலக அமைதி கோபுரத்தின் தெற்கு திசையில் ஞானம் போதிப்பது போன்ற புத்தர் சிலையும், மேற்கு திசையில் சயன கோலத்தில் இருக்கும் புத்தர் சிலையும், வடக்கு திசையில் குழந்தை பருவத்தில் உள்ள புத்தர் சிலையும், கிழக்கு திசையில் மக்களுக்கு அருளாசி வழங்குவது போன்ற புத்தர் சிலையும் அமைக்கப்பட்டது.

இதனைதொடர்ந்து சங்கரன்கோவில் புத்தர் கோயிலை சேர்ந்த புத்த பிக்கு இஸ்தானிஜி, புத்த பிக்குனிகள் லீலாவதி, கிமூரா தலைமையில் இலங்கை, ஜப்பான், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து புத்த துறவிகள் பங்கேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி, தனுஷ் குமார் எம்பி, கலெக்டர் நேர்முக உதவியாளர் (விவசாயம்) கனகம்மாள், மங்களத்துரை, ஆசிரியர் குருசாமி, முருகேசன், வக்கீல்கள் மருதப்பன், ரவிசங்கர், இராமராஜ், கண்ணன், பிரஜா பிரம்ம குமாரிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், ஓம் சக்தி வழிபாட்டு குழுவினர், கிறிஸ்தவ அமைப்பினர், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு சர்வ சமய பிரார்த்தனை நடத்தினர்.

நிகழ்ச்சியில் புத்தர் கோவில் கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய வீரிருப்பு முத்தையா குடும்பத்தினர், நிப்போசன் மியோ போகி அறக்கட்டளையைச் சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.