புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் தொடர் போரட்டம் காரணமாக இன்று (திங்கள்கிழமை) காலையில் தொடங்கிய சில நிமிடங்களிலேயே நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இரண்டு நாள் விடுமுறைக்கு பின்னர் இன்று (திங்கள்கிழமை) காலையில் நாடாளுமன்றம் மீண்டும் கூடியது. இரு அவைகளிலும் போராட்டம் தொடர்ந்தது. இதனால் இரு அவைகளும் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப்பட்டன. மக்களவை மாலை 4 மணி வரையிலும், மாநிலங்களவை மதியம் 2 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இந்த மாதம் 13 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தொடங்கியது. அன்றைய தினம் முதல் அதானி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளும், ராகுல் காந்தியின் லண்டன் பேச்சு தொடர்பாக ஆளுங்கட்சியினரும் தொடர்ந்து அமளியில் ஈடுப்பட்டு வந்தனர். இதனால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் முற்றிலுமாக முடங்கின.
இந்த நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு முந்தைய அவதூறு வழக்கு ஒன்றில் சூரத் நீதிமன்றம் வியாழக்கிழமை ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதித்தது. இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை அவர் வயநாடு எம்பி., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வரும்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் மீதமுள்ள நாட்களில் நாடாளுமன்றத்திலும் இது எதிரொலிக்கலாம் என்றே தெரிகிறது.
இதற்கிடையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்த நிதி மசோதா 2023 எதிர்க்கட்சிகளின் முழக்கங்களுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது.
எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம்: ராகுல் காந்தி கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அந்த நடவடிக்கைக்கு பின்பு இன்று முதல்முறையாக நாடாளுமன்றம் கூடியது. அதற்கு முன்பாக, எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மாநிலங்களை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் அறையில் கூடி விவாதம் நடத்தினர். இந்தக் கூட்டத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் கலந்து கொண்டது. ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் எம்.பி.கள் கறுப்பு உடை அணிந்திருந்தனர். அவர்களுக்கு ஆதரவாக திமுக எம்.பி.க்களும் கறுப்பு ஆடை அணிந்துவந்தனர்.