பிள்ளைகளை வளர்க்க தங்களின் வாழ்நாள் முழுவதையும் செலவிடும் தாய், தந்தை ஆகியோர் வயதான நிலைக்குச் சென்றுவிட்டால், அவர்களை பிள்ளைகள் கண்டுகொள்ளாத நிலை நிலவுகிறது. அத்தகைய சூழலைத் தவிர்க்கும் வகையில் தமிழக அரசு சார்பாக பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம் 2007 கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நெல்லையை அடுத்த குறிச்சி சொக்கநாதசாமி கோயில் தெருவைச் சேர்ந்த சுந்தரம் என்பவரை அவரின் பிள்ளைகள் கவனிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. தனியார் பீடி நிறுவனத்தில் 34 ஆண்டுகள் பணியாற்றிய சுந்தரத்துக்கு முத்துகிருஷ்ணன், முத்துமணிகண்டன், செண்பகநாதன், செந்தில் முருகன் என நான்கு மகன்கள் இருந்தும் அவரைக் கவனிக்கவில்லை.
குடும்பத்துக்காக உழைத்த தனக்கு, நான்கு மகன்கள் இருந்தும் யாரும் கவனிக்கவில்லை என அதிருப்தியடைந்த சுந்தரம், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்தார். அதையடுத்து மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடந்தது. அப்போது நான்கு மகன்களும் ஆஜராகி, தங்களின் தந்தையின் வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதிக்குள் தலா 2,500 செலுத்துவோம் என உறுதியளித்தனர்.
அதன்படி, முத்துகிருஷ்ணன் மற்றும் மாற்றுத் திறனாளியான முத்துமணிகண்டன் ஆகிய இருவரும் மட்டுமே மாதந்தோறும் ஆட்சியர் உத்தரவுப்படி சுந்தரத்தின் வங்கிக் கணக்கில் தலா 2,500 ரூபாய் செலுத்தினார்கள். மற்றவர்கள் ஆட்சியரின் உத்தரவைக் கண்டுகொள்ளவில்லை. சில மாதங்கள் பொறுத்திருந்து பார்த்த சுந்தரம், இது குறித்து ஆட்சியரிடம் மேல் முறையீடு செய்தார்.
நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனிடம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அவர் இது தொடர்பாக கோட்டாட்சியர் சந்திரசேகரன் விசாரிக்குமாறு உத்தரவிட்டார். விசாரணையில் செந்தில் முருகன், செண்பகநாதன் ஆகிய இருவரும் பணத்தைச் செலுத்தவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து மகன்கள் இருவறையும் மூத்த குடிமக்கள் சட்டப்படி மூன்று மாதங்கள் சிறையில் அடைக்கவும், அவர்களுக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி மேலப்பாளையம் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் இருவரையும் கைதுசெய்து சிறையில் அடைத்தார். தங்களுக்காக வாழ்ந்த தாய், தந்தை ஆகியோரை மதிக்காமல் இருக்கும் பிள்ளைகளுக்கு இந்த உத்தரவு அதிர்ச்சி அளிப்பதாக மாறியிருக்கிறது.