இலங்கை மற்றும் பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிகளுக்கிடையே நடைபெற்ற முக்கோண ஒருநாள் தொடரின் ஐந்தாவது போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை 19 வயதிற்குற்பட்ட கிரிக்கெட் அணி அங்கே பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் இளையோர் அணிகள் பங்கேற்கும் முக்கோண இளையோர் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில் இலங்கை அணி பங்களாதேஷ் அணியை நேற்று (26) அபுதாபியின் டோலேரன்ஸ் ஓவல் மைதானத்தில் வைத்து எதிர் கொண்டது.
இப் போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 48 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி சார்பில் தினுர கலுப்பகன 49 ஓட்டங்களும், மல்ஷ தருப்பத்தி 46 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.
இதேவேளை பங்களாதேஷ் பந்துவீச்சில் மரூப் ம்ரிதா மற்றும் ரோஹனத் உல்லா போர்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.
இதன்பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 216 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி போட்டியின் வெற்றி இலக்கை 47.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 217 ஓட்டங்களுடன் அடைந்தது.
பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டத்தில் ஜிஸான் அலாம் வெறும் 32 பந்துகளுக்கு 62 ஓட்டங்களையும், அஹ்ரார் அமின் ஆட்டமிழக்காது 44 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.
இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி சார்பாக பந்துவீச்சில் தினுர கலுப்பகன 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.
இந்நிலையில் இலங்கை அணி இந்த முக்கோண ஒருநாள் தொடரில் தமது இறுதி குழுநிலை மோதலில் நாளை (28) ஆப்கானிஸ்தான் அணியினை எதிர்கொள்ளவுள்ளது.