சென்னை: பரந்தூர் விமான நிலையம் தொடர்பான, தொழில்நுட்ப பொருளாதார ரீதியிலான விரிவான அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் 4 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துவருவது மற்றும் சரக்குகள் கையாளும் திறன் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டும், பொருளாதார திறன் மேம்பாட்டைக் கருதியும், சென்னையில் 2-வது விமான நிலையம் அமைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பரந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் போராட்டம்: அங்கு, 4,700 ஏக்கர் பரப்பில், ரூ.20 ஆயிரம் கோடி முதலீட்டில் விமான நிலையம் அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு அங்குள்ள ஏகனாபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இருப்பினும், தமிழகத்தின் பொருளாதார எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து அதாவது, நிலத்துக்கு உரிய மதிப்பு, வேலைவாய்ப்பு, குடியிருப்பு உள்ளிட்டவற்றை வழங்கி நிலத்தை எடுக்க அரசு முயற்சித்து வருகிறது.
இரண்டு முறை நீட்டிப்பு: இந்நிலையில், பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு தொழில்நுட்ப பொருளாதார ரீதியிலான விரிவான அறிக்கை அளிப்பதற்கு தகுதியான நிறுவனத்தை தேர்ந்தெடுக்க, டிட்கோ நிறுவனம் கடந்தாண்டு டிசம்பரில் ஒப்பந்தம் கோரியது.
இந்த ஒப்பந்தத்துக்கான அவகாசம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் முடிந்த நிலையில், போதிய நிறுவனங்கள் பங்கேற்காததால், பிப்.6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதிலும், குறிப்பிடத்தக்க அளவில் நிறுவனங்கள் விண்ணப்பிக்காததால் தொடர்ந்து, 2-வது முறையாக பிப்.27-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், 4 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிறுவனங்களில் ஒரு நிறுவனத்தை விரைவில் தேர்வு செய்து, அறிக்கை அளிப்பதற்கான பணி ஆணை வழங்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.