
கர்நாடகாவில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடகா சட்டமன்றத்துக்கு மே மாதத்தில் தேர்தல் வரவுள்ளதால் அங்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. கர்நாடகாவில் பா.ஜ.கவும், காங்கிரஸும் இரண்டு பிரதான கட்சிகள். மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் மூன்றாவது பெரிய கட்சியாக உள்ளது.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ.க அரசு சிறுபான்மையினருக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டை நீக்கி, இடஒதுக்கீட்டில் சிற மாற்றங்களைச் செய்தது. அதேபோல, பட்டியலின மக்களுக்கான 17 சதவீத இடஒதுக்கீட்டிலும் சில மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான பரிந்துரையை மத்திய அரசு வழங்கியது.

2005-ம் ஆண்டு காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியின்போது ஏ.ஜே.சதாசிவம் ஆணையம் வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
பட்டியலின பிரிவு மக்களை வகைப்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கர்நாடகா அரசின் இந்த முடிவுக்கு பஞ்சாரா பிரிவு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். அரசின் இந்த முடிவால் அவர்கள் தரப்பு பாதிக்கப்படும் என்று குற்றம்சாட்டுகின்றனர்.

இந்தநிலையில், ஷிமோகா மாவட்டத்திலுள்ள பா.ஜ.க மூத்த தலைவரும் கர்நாடகா மாநில முன்னாள் முதல்வருமான எடியூரப்பாவின் இல்லத்தின் முன் பஞ்சாரா சமூகத்தைச் சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென வன்முறையில் ஈடுபட்டனர்.
தாக்குதலால் எடியூரப்பா வீட்டில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. இதையடுத்து வன்முறையில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
newstm.in