புதுச்சேரி: நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி குரல் ஒலிக்கக் கூடாது என திட்டமிட்டு பாஜக செய்த சூழ்ச்சியினால்தான் எம்.பி பதவி பறிக்கப்பட்டது என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாரயணடாமி தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி பதவி தகுதி இழப்புக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் புதுச்சேரி – அண்ணா சிலை அருகே உண்ணாவிதரப் போராட்டம் இன்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், முனனாள் எம்எல்ஏக்கள் அனந்தராமன் நீலகங்காதரன் மற்றும் திமுக அமைப்பாளரும், எதிர்கட்சித் தலைவருமான சிவா, எம்எல்ஏக்கள் சம்பத், அனிபால் கென்னடி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சலீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களும் எழுப்பப்பட்டன.
அப்போது முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியது: “வருங்கால பிரதமர் ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி இழப்பு செய்ததற்கு காரணமே அதானியின் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்ததுதான். நரேந்திர மோடிக்கும், அதானிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று ராகுல் கேட்டார். மேலும் , அதானியை வெளிநாடு செல்லும்போது மோடி அழைத்துச் சென்றார். அதானிக்கு மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களை வாரி வழங்கியிருக்கிறீர்கள். இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. மோடி பிரதமரான பிறகே இது நடந்துள்ளது. இதற்கு மோடி பதில் சொல்ல வேண்டும் என்று ராகுல் கேள்வி எழுப்பினார்.
இதனால் ராகுல் காந்தியின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கக் கூடாது என்பதற்காக திட்டமிட்டு பாஜக செய்த சூழ்ச்சியின் காரணமாக அவர் பதவி இழப்பு செய்யப்பட்டுள்ளார். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் ராகுல் காந்திக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். இதற்கான அவர்களுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் போராட்டம் தொடரும். மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி அரசை தூக்கி எறியும் வரை காங்கிரஸ் கட்சி தெருவில் இறங்கி போராட்டம் நடத்தும்” என்றார்.