“மனிதத் தன்மையற்ற செயல்” – நெல்லை காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க அண்ணாமலை வலியுறுத்தல்

சென்னை: விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடுங்கியது மனிதத் தன்மையற்ற செயல் என்றும் இதில் ஈடுபட்ட நெல்லை காவல் அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க என்று பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பான தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அம்பாசமுத்திரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் என்பவர் ஜல்லிக்கற்களைக் கொண்டு விசாரணைக் கைதிகளைக் குரூரமாகத் தாக்கி, அவர்கள் பற்களை பிடுங்கித் துன்புறுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பற்களை உடைத்து, வாயில் ஜல்லிக் கல்லைத் திணித்து முகத்தில் கடுமையாகத் தாக்கியதாகவும் 8 இளைஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், புதிதாக திருமணமான இளைஞர் ஒருவரின் அந்தரங்க உறுப்பையும் குரூரமாகத் தாக்கியதில் அவர் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. குற்றம் எதுவாக இருந்தாலும், விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்கள் மீதான இத்தகைய தாக்குதல்கள் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. பாதுகாவலாக இருக்க வேண்டிய காவல் துறையிடமிருந்தே பொதுமக்கள் பாதுகாப்பு தேடும் அவலம் மிகவும் வருந்தத்தக்கது.

ஏற்கெனவே தமிழகத்தில் அடிக்கடி நடக்கும் காவல் நிலைய மரணங்களால், பொதுமக்கள், காவல்துறை மீது நம்பிக்கை இழந்து வரும் நிலையில், இது போன்ற மனிதத் தன்மையற்ற தாக்குதல்கள் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தும். உடனடியாக திமுக அரசு, தகுந்த விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும், குற்றம் செய்தவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கவும், மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க, காவல் துறைக்கு அறிவுறுத்தவும் தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று அந்தப் பதிவில் கூறியுள்ளார்.

முன்னதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், “சிறிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களை கருங்கற்களால் பற்களை உடைத்தும், பிடுங்கியும், கற்களை வாயில் போட்டு உதடுகளிலும், கன்னத்திலும் குருதி வரும் வரை தாக்கிய காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.