ராணுவ வீரர் ஒருவர் தன்னுடைய மனைவி ஜேசன் ஸ்காட்டின் பிறந்த நாளுக்கு, அவரை ஆச்சர்யபடுத்த முடிவு செய்திருக்கிறார். இதற்காக அமெரிக்காவின் வட கரோலினாவில் உள்ள கார்வனா (Carvana) என்ற வணிக நிறுவனத்திடம் இருந்து, 2021-ல் பயன்படுத்தப்பட்ட, 59 லட்ச ரூபாய் மதிப்புள்ள Maserati SUV கார் ஒன்றை வாங்கி இருக்கிறார்.
அந்த காரை வழக்கமான பராமரிப்பிற்காக மாசிராட்டி டீலர்ஷிப்பிற்கு, பிப்ரவரியில் கொண்டு சென்றிருக்கிறார். அங்கு தான் அவருக்கான அதிர்ச்சி காத்திருந்தது. காரை சர்வீஸ் செய்த ஊழியர்கள், இது திருடப்பட்ட கார் என்ற அதிர்ச்சித் தகவலை அவரிடம் தெரிவித்துள்ளனர்.
வாகனத்தின் அடையாள எண்ணை ஆய்வு செய்ததில், இந்த கார் 2017-ம் ஆண்டு கார் என கண்டறிந்துள்ளனர். காரின் சில பாகங்கள், கார் தயாரிக்கப்படும் இடத்தில் இருந்து சேர்க்கப்படவில்லை என்பதையும் ஊழியர்கள் கண்டறிந்தனர்.
திருடப்பட்ட கார் என்பதால் இதன்பின் அவரால் இந்த காரை பயன்படுத்த முடியாது. சர்வீஸ் சென்டரின் ஊழியர்கள் இது குறித்துக் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து காவல் துறை அதிகாரிகளால் கார் கைப்பற்றப்பட்டது.
இந்நிலையில் கார் வாங்கிய நிறுவனத்தின் மீது தனக்கு ஏற்பட்ட பொருளாதாரச் செலவுகளுக்காகவும், நற்பெயரின் களங்கத்திற்காகவும் 1 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
அந்த கார் திருடப்பட்ட கார் என்பது தங்களுக்குத் தெரியாது என்றும், கார் வாங்குவதற்காக அவர் செலவு செய்த பணத்தைத் திரும்பத் தருவதற்கான வேலைகள் நடந்து கொண்டிருப்பதாகவும் கார்வனா நிறுவனம் தெரிவித்துள்ளது.
கார் வாங்குவதற்கு முன்பு மோசடிகள் குறித்து விழிப்புணர்வோடு இருப்பது நல்லது!