போபால்: மத்தியபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பாஜ அறுதி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறும் என பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உறுதிபட தெரிவித்துள்ளார். மத்தியபிரதேசத்தில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜவின் 15 ஆண்டுகால ஆட்சியை அகற்றி விட்டு, காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. கமல்நாத் முதல்வராக பதவியேற்றார். ஆனால் உள்கட்சி பூசல் காரணமாக ஜோதிராதித்ய சிந்தியா தனது ஆதரவாளர்கள் 22 பேருடன் காங்கிரசில் இருந்து விலகி பாஜவில் இணைந்தார். இதையடுத்து பாஜ மீண்டும் ஆட்சியமைக்க சிவ்ராஜ் சிங் சவுகான் முதல்வராக பதவியேற்றார். அவரது பதவிக்காலம் முடிவுக்கு வரவுள்ளதால், இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், தலைநகர் போபாலில் கட்டப்படவுள்ள பாஜ கட்சி அலுவலகத்துக்கு ஜே.பி.நட்டா அடிக்கல் நாட்டினார். பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “பாஜ தொண்டர்கள் எனக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர். அவர்களுக்கு எனது நன்றி. மத்தியபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி பாஜ அறுதி பெரும்பான்மை வெற்றி பெறும்” என்று தெரிவித்தார்.