வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ராகுல் பதவிநீக்கம் தொடர்பாக ஏற்பட்ட அமளியால் பார்லி., இரு அவைகளும் இன்று துவங்கிய ஒரு நிமிடத்திலேயே ஒத்தி வைக்கப்பட்டது.
ராகுலுக்கு ஆதரவாக டில்லி ஜந்தர் மந்தரில் இளைஞர் காங்கிரசார் போராட்டம் நடத்தினர். பேரணி நடத்த முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், இரு தரப்புக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்களை கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். அப்போது, மத்திய அரசுக்கு எதிராக கோஷம்போட்டபடி வேனில் சென்றனர்.
‘மோடி’ எனும் ஜாதி குறித்து அவதூறாக பேசிய ராகுல் கோர்ட் உத்தரவுப்படி 2 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றதால் எம்பி., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு காங்., மற்றும் எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் 2 நாள் விடுமுறைக்கு பின்னர் கூடியதும் ராகுல் விவகாரத்தை காங்., மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்பிக்கள் எழுப்பினர். இதனால் பெரும் அமளி ஏற்பட்டது. சபாநாயகர் மீது காகிதம் மற்றும் பதாகைககள் வீசப்பட்டன.
தொடர்ந்து கூச்சல் குழப்பம் நிலவியதால் லோக்சபா,, ராஜ்யசபா ஒத்தி வைக்கப்பட்டன.
மிரட்டல்
தொடர்ந்து பார்லிமென்ட் வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின.
அப்போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது: நாட்டில் ஜனநாயகத்திற்கு பிரதமர் மோடி முடிவு கட்டுகிறார் என்பதை காட்டவே கறுப்பு உடையில் வந்துள்ளோம். தன்னாட்சி அமைப்புகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். பிறகு, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவர்களை மிரட்டி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். பணியாதவர்களை சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை மூலம் மிரட்டி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
இது போல் தமிழக சட்டசபைக்கு காங்., எம்எல்ஏ.,க்கள் கறுப்பு சட்டை அணிந்து வந்தனர். புதுச்சேரி சட்டசபை துவங்கியதும் காங்., மற்றும் திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர் .
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement