ராகுல் காந்தி, 2019 லோக் சபா தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமர் மோடி, நீரவ் மோடி, லலித் மோடி ஆகியோரை விமர்சிக்கும் விதமாகப் பேசியது, ஒட்டுமொத்த மோடி சமூகத்தினரையும் அவமதிக்கிறது என அவருக்கெதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் குஜராத் நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. அதற்கடுத்த நாளே, லோக் சபா செயலகம் அவரின் எம்.பி பதவியைப் பறித்தது.
இதன் காரணமாக ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும், பா.ஜ.க-வைக் கடுமையாகச் சாடிவருகின்றன. இன்றுகூட, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உட்பட 18 எதிர்க்கட்சி எம்.பி-க்கள் கறுப்பு உடை அணிந்து, அதானி விவகாரம் மற்றும் ராகுல் காந்தியின் எம்.பி பதவி தகுதி நீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கினர்.
இந்த நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தின் பா.ஜ.க தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தீபக் பிரகாஷ், `ராகுல் காந்திக்கென காங்கிரஸ் தனி நாடுகூட கேட்கும்’ என விமர்சித்திருக்கிறார்.
ராகுல் காந்தி விவகாரம் தொடர்பாக ஊடகத்திடம் பேசிய தீபக் பிரகாஷ், “ராகுல் காந்திக்கும், காங்கிரஸுக்கும் இந்திய அரசியல் சாசனத்தின்மீது நம்பிக்கை இல்லை. மேலும், இந்த நாட்டின் ஜனநாயகம் மற்றும் நீதித்துறைமீதும் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. இவையெல்லாம் பார்க்கும்போது, இந்த நாட்டின் அரசு அமைப்புகளின்மீது நம்பிக்கை இழந்துவிட்ட அவர்கள், ராகுல் காந்திக்குத் தனி நாடு வேண்டும் என்றுகூட ஒருநாள் கேட்பார்கள் என்று தெரிகிறது” எனக் கூறினார்.