ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து
காங்கிரஸ்
சார்பில் நடைபெற்ற வியூக கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸின் பரம எதிரி மம்தா
வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக இல்லாத எதிர்கட்சிகளின் கூட்டணியை உருவாக்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முயற்சி செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்தார். அதேபோல் காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக சாடி வருகிறார்.
இந்தநிலையில் கடந்த 23ம் தேதி அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்பி பதிவு பறிக்கப்பட்டது. இந்தநிலையில் ராகுல் காந்திக்கு ஆதரவாக பல்வேறு எதிர்கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றனர். மேலும் நாடு முழுவதும் காங்கிரஸார் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆச்சரியபடுத்திய மம்தா பானர்ஜி
இந்த சூழலில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி வியூகக் கூட்டத்தில் திரிணாமுல் கட்சி கலந்துகொண்டது ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மம்தா பானர்ஜியின் டிஎம்சி, ராகுல் காந்தியின் எம்பி தகுதி நீக்கத்திற்கு எதிராக நடந்த கருப்பு சட்டை போராட்டத்தில் பங்கேற்றது.
ராகுல் காந்தி ஒன்றும் மிகப்பெரிய தலைவர் இல்லை, பிரதமர் மோடி தேவையில்லாமல் ராகுல் காந்தியை புரோமோட் செய்து ஹீரோவாக்க முயற்சி செய்கிறார் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறிய சில நாட்களுக்குப் பிறகு இந்த அரிய சம்பவம் நடந்துள்ளது.
ராகுல் காந்தி பதவி நீக்கம்
மேலும் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பதிவில், “பிரதமர் மோடியின் புதிய இந்தியாவில், எதிர்க்கட்சித் தலைவர்கள் பாஜகவின் பிரதான இலக்காகிவிட்டனர்! கிரிமினல் பின்னணி கொண்ட பாஜக தலைவர்கள் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டாலும், எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசுவதற்கு தகுதியற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். இன்று, நமது அரசியலமைப்பு ஜனநாயகத்திற்கு ஒரு புதிய தாழ்வை நாங்கள் கண்டுள்ளோம்” என்று ராகுல் காந்தியின் பதவி நீக்கம் குறித்து ட்வீட் செய்திருந்தார்.
அதேபோல் இன்று திரிணாமுல் எம்.பி.க்கள் ஜஹர் சர்க்கார் மற்றும் பிரசூன் பானர்ஜி ஆகியோர் காங்கிரஸுக்கு ஆதரவளிக்க கட்சியின் சார்பில் நடந்த வியூகக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்று நம்புவதால், ராகுல் காந்தி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் வலியுறுத்தியது.
நன்றி தெரிவித்த காங்கிரஸ்
ஒரே கருத்து கொண்ட எதிர்க்கட்சிகள் இன்று காலை 10 மணிக்கு தேசிய தலைநகரில் உள்ள காங்கிரஸ் தலைவர் மலிகார்ஜுன் கார்கேவின் அலுவலகத்தில் கூடியது. மல்லிகார்ஜுன் கார்கே, டிஎம்சியின் இருப்பைக் குறிப்பிட்டார், அவர் தனது கட்சி “ஜனநாயகத்தைப் பாதுகாக்க முன்வருபவர்களை வரவேற்கிறோம்” என்றார்.
கர்நாடகா தேர்தல்: பாஜகவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்; முஸ்லீம்களுக்கு கல்தா.!
‘‘இதற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. அதனால்தான் நேற்று அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், இன்றும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க, மக்களைப் பாதுகாக்க முன்வருபவர்களை வரவேற்கிறோம். எங்களை ஆதரிக்கும் மக்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கார்கே கூறினார். காங்கிரஸ் இல்லாத எதிர்கட்சிகளை ஒருங்கிணைத்த மம்தா, தற்போது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.