ராமநாதபுரம்: ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே பிரசித்திபெற்ற வழிவிடு முருகன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல், இந்தாண்டும் 83ம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதலுடன் இன்று துவங்கியது. இதில் முதல் நிகழ்வாக இன்று காப்புகட்டு மற்றும் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ராமநாதபுரம் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு காப்பு கட்டி சாமி தரிசனம் செய்தனர். விழா தொடர்ந்து 10 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி மற்றும் பால்குட நிகழ்ச்சி 5ம் தேதி நடக்கிறது. முதல் நாள் விழாவை ஒட்டி சிறப்பு அலங்காரத்தில் முருகன் வள்ளி தெய்வானையுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.