காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு விதமான போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். நாடாளுமன்றத்திற்கு இன்றைய தினம் வருகை புரிந்த காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த எம்.பிக்கள் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர்.
எதிர்க்கட்சிகள் அமளி
மேலும் எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. அடுத்தகட்டமாக சட்டப் போராட்டத்தை ராகுல் காந்தி முன்னெடுப்பார் எனத் தெரிகிறது. இதேபோல் தமிழக சட்டமன்றத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து வருகை புரிந்தனர். முன்னதாக பதாகைகள் ஏந்தி பாஜகவிற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
ராகுல் காந்தி சர்ச்சை
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டனர். ராகுல் காந்தி விவகாரம் தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தில் பேச அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக சட்டமன்றத்தில் கருப்பு புடவையில் பாஜக எம்.எல்.ஏ
வருகை புரிந்திருந்தார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கருப்பு உடை
அப்போது செய்தியாளர்கள் சிலர், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கருப்பு உடை அணிந்து சட்டமன்றத்திற்கு வருகை புரிந்துள்ளனர். நீங்களும் கருப்பு உடையில் வந்துள்ளீர்களே எனக் கேட்டனர். அதற்கு, ஐயையோ இன்னைக்கா… எனக் கேட்டு விட்டு சிரித்தார். உங்களுக்கு தெரியாதா எனக் கேட்டதற்கு, எனக்கு தெரியாதே என்றார். அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி, நீங்களும் கருப்பு உடையில் வந்துள்ளீர்கள் எனச் சுட்டிக் காட்டினார்.
வானதி கருப்பு உடை
அதற்கு, அப்படிலாம் எதுவும் இல்லை எனக் கூறி சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் சிரித்து விட்டார். அதன்பிறகும் செய்தியாளர்கள் விடவில்லை. கருப்பு உடையை பற்றி கேட்டுக் கொண்டே இருந்தனர். அதற்கு, ஐயோ இல்லமா… சாரி… எனக்கு அதைப் பற்றி தெரியாது. ஓகே ஓகே… அடக் கடவுளே… எனக் கூறிவிட்டு சட்டமன்றத்திற்குள் சென்றார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பெரிதும் வைரலாகி வருகிறது.
சட்டமன்றத்தில் பதில்
இந்நிலையில் சட்டமன்றத்தில் பேசிய வானதி சீனிவாசன், தமிழகத்தில் எமர்ஜென்சியின் போது ஆளுங்கட்சியின் தலைவர்கள் எப்படி எல்லாம் சிரமப்பட்டார்கள் என்பதை நினைவூட்டும் விதமாக கருப்பு உடையில் வந்திருக்கிறேன் என்றார். மேலும் பேசுகையில், சட்டமன்றத்தில் காகிதமில்லா சட்டமன்றமாக சென்று கொண்டிருக்கிறோம்.
வாட்ஸ்-அப் கேள்விகள்
ஆனால் கேள்வி கேட்பதற்கு இன்றும் காகிதத்தை பயன்படுத்தி வருகின்றோம். வாட்ஸ்-அப் மூலம் கேள்விகளை எழுப்ப இந்த சட்டமன்றம் வாய்ப்பை ஏற்படுத்தி தருமா? அரசு இதற்கான நடவடிக்கைகள் எடுக்குமா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் மனோ தங்கராஜ், எம்.எல்.ஏக்களுக்கு டேப்லட் மூலம் சட்டமன்ற விவரங்களை கையாளும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக போதிய பயிற்சியும் வழங்கப்பட்டிருக்கிறது. இவற்றை சரியான முறையில் பயன்படுத்தி எம்.எல்.ஏக்கள் தங்களை மேம்படுத்தி கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.