புதுடெல்லி: டெபுடேஷனில் வெளிநாடுகளுக்கு சென்று பணியாற்றும் அதிகாரிகள் குறிப்பிட்ட காலத்தை தாண்டியும் அங்கு தங்கியிருந்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (டிஓபிடி) அனைத்து மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: வெளிநாடுகளில் தங்கி பணியாற்ற அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் குறிப்பிட்ட காலத்தை தாண்டியும் அங்கு தங்கியிருந்தால் அதனை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். வெளிநாடுகளில் தங்கி பணியாற்றும் அதிகாரிகள் அங்கீகரிக்கப்பட்ட காலத்தையும் தாண்டி தங்கியுள்ளதை தவிர்க்க வேண்டும்.
இந்தியாவின் பிரதிநிதியாக வெளிநாடுகளில் பணியாற்றும் அதிகாரிகள், தங்களது மேலதிகாரிகளின் உரிய ஒப்புதல்களுடன் பிரதிநிதித்துவ காலத்தை எழுத்துப்பூர்வமாக நீட்டிக்காவிட்டால் பிரதிநிதித்துவ காலம் முடிவடையும் தேதியில் விடுவிக்கப்பட்டதாகவே கருதப் படுவர்.
வெளிநாட்டில் பணிபுரியும் அதிகாரிகள் உரிய காலத்துக்குமேல் தங்காமல் இருப்பதை உடனடியாக உறுதி செய்வது சம்பந்தப்பட்ட உயர் அதிகாரியின் பொறுப்பாகும்.
அப்படி தங்கியிருக்கும் அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் பிற பாதகமான விளைவுகளுக்கும் அவர்கள் உட்பட நேரிடும்.
விதிகளின்படி பிரதிநிதித்துவத் தின் பதவிக்காலத்தை நீட்டிப் பதற்கான எந்தவொரு திட்டமும், பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பே போதுமான அளவு கால இடைவெளியுடன் தொடங்கப்பட வேண்டும் பிரதிநிதித்துவம் அல்லது வெளிநாட்டு சேவை யின் பதவிக்காலத்தை நிர்வகிக் கும் விதிகளில் தளர்வு அனுமதிக்கப்பட்டிருந்தாலும், அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதித்துவ காலத்திற்கு அப்பால் அதிக காலம் தங்கியிருந்து பணிபுரிவதை முறைப்படுத்துவதற்கான முன் மொழிவுகளும் தொடர்ந்து பெறப்படும். இவ்வாறு டிஓபிடி சுற்றறிக் கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.