புதுடெல்லி: நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் உயர்ந் துள்ளது. 149 நாட்களில் இல்லாத அளவுக்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 1,890-ஆக உயர்ந்துள்ளது.
2020-ம் ஆண்டு தொடக்கத்தில் நாட்டில் கரோனா வைரஸின் தாக்கம் தொடங்கியது. அதன் பின்னர் கோடிக்கணக்கான மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. நாட்டில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,890-ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 9,433-ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
149 நாட்களுக்குப் பிறகு நாட்டில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதற்கு முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி ஒரே நாளில் 2,208 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
கரோனாவால் பாதிக்கப்பட்டு நேற்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் கரோனாவால் உயிரிழந்தோரின் மொத்தஎண்ணிக்கை 5,30,831 ஆக உயர்ந்துள்ளது. இதில் கேரளாவில் மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
தினசரி கரோனா பாசிட்டிவ் விகிதம் 1.56-ஆகவும், வாராந்திர பாசிட்டிவ் விகிதம் 1.29 ஆகவும் உள்ளது.
நாட்டில் இதுவரை 4.47 கோடிபேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4.41 கோடி பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இதன்மூலம் நோயிலிருந்து மீள்வோரின் எண்ணிக்கை 98.79 சதவீதமாக உள்ளது. இதுவரை நாட்டில் 220.65 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்ச கம் தெரிவித்துள்ளது.