சென்னை: இங்கிலாந்து ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைக் கோள்களும் இஸ்ரோவின் எல்விஎம்-3 ராக்கெட்மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.
இங்கிலாந்தின் ஒன்வெப் நிறுவன செயற்கைக் கோள்களை ஜிஎஸ்எல்வி மார்க்-3 (எல்விஎம்-3)ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த, இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் (Newspace India Limited) நிறுவனம் சுமார் ரூ.1,000 கோடியில் ஒப்பந்தம் செய்தது. முதல்கட்டமாக, 36 செயற்கைக் கோள்கள் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த அக்.23-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டன.
2-வதுகட்டமாக 36 செயற்கைக் கோள்களை ஏவுவதற்கான பணிகள் தொடங்கின. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து 36 செயற்கைக் கோள்களுடன் எல்விஎம்-3 ராக்கெட் நேற்று காலை 9 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியில் இருந்து 450 கி.மீ. தூரத்தில் உள்ள சுற்றுப்பாதைகளில் 36 செயற்கைக் கோள்களும் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன. இவற்றின் மொத்த எடை 5,805 கிலோ. இணைய சேவை பயன்பாட்டுக்காக இவை ஏவப்பட்டுள்ளன.
இஸ்ரோவின் ‘பாகுபலி’ என வர்ணிக்கப்படும் எல்விஎம்-3 ராக்கெட் 43.5 மீட்டர் உயரம், 640 டன் எடை கொண்டது. மிகவும் சிக்கலான கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் செயல்படக்கூடியது.
விஞ்ஞானிகள் மத்தியில் இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் பேசியபோது, ‘‘அதிக எடை கொண்ட எல்விஎம்-3 வகை ராக்கெட்டை வணிக பயன்பாட்டுக்கும் செயல்படுத்துவதற்கு வழிவகை செய்த பிரதமருக்கு நன்றி’’ என்றார்.
ராக்கெட் பயணம் வெற்றிகரமாக முடிந்ததற்காக இஸ்ரோ தலைவர், விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.