`பத்து தல’ இசை வெளியீட்டு விழா மேடையில் பேசிய சிம்புவின் வீடியோதான் தற்போது வைரல். டிரெய்லரும், பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிற நிலையில், வரும் 30-ம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகவிருக்கிறது.
‘பத்து தல’ ரிலீஸையொட்டி, அதன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா விகடனுக்கு அளித்த பேட்டியில் பேசிய சில சுவாரஸ்ய விஷயங்களின் தொகுப்பு இங்கே…
கன்னட சினிமாவான ‘மஃப்டி’ ரீமேக்கில். ‘சில்லுனு ஒரு காதல்’ இயக்குநர் கிருஷ்ணா உள்ளே வந்தது எப்படி?
“‘சில்லுனு ஒரு காதல்’ திரைப்படத்துக்குப் பிறகு கிருஷ்ணா என்னிடம் வந்து தனக்கு வாய்ப்பளிக்குமாறு கேட்டதேயில்லை. இத்திரைப்படத்திற்கு நானாகத்தான் அவரை அழைத்துப் பேசினேன். அதன் பிறகு கிருஷ்ணா என்னிடம், ‘இந்த வாய்ப்பை யார் கொடுத்திருந்தாலும் அது பெரியதுதான். நீங்கள் கொடுத்தது கூடுதல் ஸ்பெஷல்!’ என்றார்.
முதலில் அவர் ஆர்வத்தில் பேசுகிறார் என்று நினைத்தேன். படத்தின் அவுட்புட் பார்க்கும்போதுதான் அவருடைய தாகமும், தீரா உழைப்பும் தெரிகின்றன. என்றும் அவர் தனக்குப் பிரச்னை எனக் காட்டிக் கொள்ளமாட்டார். நான் அவர் மீது வைத்த நம்பிக்கையை 200 சதவிகிதம் பூர்த்தி செய்துள்ளார்.”
சிம்புவுக்கும் உங்களுக்குமான பிரச்னை, அதன் பிறகு அவர் இந்தப் படத்தில் நடித்தது குறித்து…
“சிம்புவுக்கும் எனக்கும் சுற்றி யாரை வைத்துக் கொள்ள வேண்டும், யாரை வைத்துக் கொள்ளக் கூடாது என்பதைத் தீர்மானிப்பதில்தான் பிரச்னை. அவர் பல விமர்சனங்களைச் சந்தித்திருக்கிறார். ஏன், நானே அவரை விமர்சனம் செய்திருக்கிறேன். திறமையான மனிதர் இப்படி இருக்கிறார் என்கிற ஆதங்கத்தில், அவர் நன்றாக வர வேண்டும் என்றுதான் விமர்சனம் செய்தேன். ஆனால் இப்போது அவருடைய கம்பேக் அனைவருக்கும் திருப்திகரமானது. நான் அவரை பொதுத் தளத்தில் விமர்சனம் செய்திருக்கிறேன். வேறு எந்த நடிகராக இருந்தாலும் எனக்கு வாய்ப்பளித்திருக்க மாட்டார்கள். அவர் எனக்கு வாய்ப்பளித்தார், அதுதான் சிம்பு. நான் பல சமயங்களில் சிம்புவுடன் இருந்திருக்கிறேன். அவர் யார் மீதும் பொறாமை, கவலை அடைந்தோ பார்த்தது கிடையாது. அவரிடம் பாசிட்டிவிட்டி மட்டும்தான் இருக்கும்” என்றவர் கண்ணில் சிம்பு மீது கொண்ட பற்று தெரிந்தது.
சிம்புவின் ஃபேவரைட் இயக்குநர்களில் ஒருவரான கௌதம் மேனன் இதில் வில்லனாக இணைந்தது எப்படி?
“வில்லன் கதாபாத்திரத்திற்குப் புதுமையான வடிவத்தைத் தேடினோம். கிருஷ்ணா, கௌதம் மேனன் வைத்துப் பண்ணலாம் என்று கூறினார். கௌதம் மேனன் இயக்கத்தில்தான் படம் பண்ண முடியவில்லை, அவருடைய நடிப்பில் படத்தைத் தயாரிக்கலாம் என்று நினைத்தேன். கௌதம் மேனனும் கதையைக் கேட்டுவிட்டு நடிக்க ஒப்புக் கொண்டார்.”
ஒரு நடிகராக கௌதம் கார்த்திக்கை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
“கௌதம் கார்த்திக் எனக்குப் பிடித்தமான ஹீரோ. இந்தத் திரைப்படமும், இனி வெளிவரும் திரைப்படங்களும் அவரது வெற்றிப் பாதைக்கு வழி அமைக்கும். கௌதம் கார்த்திக்குக்கு எந்த இடத்திலும் தான் ஒரு பெரிய நட்சத்திரத்தின் மகன் என்ற நினைப்பு இருக்காது. அவர் வெளியில் காட்டும் முகம் வேறு, அவருடன் பர்சனல் முகம் வேறு.
‘தேவராட்டம்’ திரைப்படத்தை 52 நாள்களில் ஆக்ஷன் காட்சிகளோடு முடித்தோம். கௌதம் கார்த்திக் இல்லையென்றால் அது சாத்தியமாகி இருக்காது. 18 நாள்கள் காட்சிகளைத் திரும்ப எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் ரூ.8 கோடி நஷ்டம். இந்தத் தியாகம், மக்களுக்குத் திரைப்படத்தில் மாற்றங்களின்றி ஃப்ரஷ் ஹீரோவைக் காட்டவேண்டும் என்றுதான்!” என நம்பிக்கையுடன் பதிலளித்தார் ஞானவேல் ராஜா.
ஏ.ஆர்.ரஹ்மான் – சிம்பு கூட்டணி, ஏ.ஆர்.ரஹ்மான் – கிருஷ்ணா கூட்டணி – ‘பத்து தல’ மூலம் சாத்தியமானது எப்படி?
“ஏ.ஆர் ரஹ்மானுக்கு கிருஷ்ணா மீதும், சிம்பு மீதும் அலாதி பிரியம். அந்தப் பட்டியலில் நானும் இணைய வேண்டும். இரண்டு படங்கள் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணியாற்றி விட்டேன். ‘முன்பே வா’, ‘நியூயார்க் நகரம்’ ஆகிய பாடல்கள் சமீபத்தில் வெளியான ‘பத்து தல’ திரைப்படத்தின் பாடல்கள் அளவுக்கு இன்னும் ஃப்ரஷ்ஷாக இருக்கிறது. அமீனையும் ஏ.ஆர் ரஹ்மான் இதில் பாட வைத்தது கூடுதல் சந்தோஷம். நான் எந்தத் திரைப்படத்திற்கும் படப்பிடிப்பு தளத்திற்குச் சென்று பார்க்க மாட்டேன். தீட்டிய திட்டங்கள் சரியாக நடந்து கொண்டிருக்கிறதா என்று மட்டும் பார்த்துக்கொள்வோம்.”
விக்ரம் – பா.இரஞ்சித் காம்போவில் ‘தங்கலான்’ படம் எப்படி வந்துகொண்டிருக்கிறது?
“இயக்குநரின் எதிர்பார்ப்பில் ஒரு சதவிகிதம்கூட குறைந்து விடக் கூடாது என்று விக்ரம் எப்போதும் உழைத்துக் கொண்டே இருப்பார். ‘தங்கலான்’ ஒரு உலகத்தர சினிமாவாக இருக்கும். இயக்குநர் பா.இரஞ்சித் கரியரிலும் நடிகர் விக்ரம் கரியரிலும் எங்களது கரியரிலும் தங்கலான் ஒரு மைல்கல்லாக இருக்கும். ஒரு முறை எனது கடன் அனைத்தும் அதிகரித்து விட்டது, என்னுடைய அடுத்தடுத்த திரைப்படங்களும் நிகழ்வதற்குத் தாமதமாகியது. அந்தச் சமயத்தில் எனது மனைவி, திரையுலகினர் பலரும் என்னைப் பற்றிக் கூறும் வீடியோவை எனக்குக் காண்பித்து சர்ப்ரைஸ் ஆக்கினார். ‘தோல்வி அடைந்துவிட்டோம் என்று முட்டாள் போன்று இருக்கிறீர்கள்’ என்று எனது மனைவி கூறினார். அதுதான் என் வாழ்க்கையில் யூ-டர்னாக அமைந்தது. அது போல் எனது பெற்றோரும் எனக்கு ஊக்கமளித்தனர்!” என்றார் பெருமிதத்துடன்.