அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து

Tamil Nadu Political News: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை அறிவிக்கலாம் எனவும், அதிமுக பொதுக்குழு கூட்டத்தில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து, அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் அதிமுகவின்  பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றுக்கொண்டார். மேலும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தமிழ்நாடு முழுவதும் இனிப்புகள் வழங்கியும் கேக் வெட்டியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதேநேரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொலைபேசி மூலமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். அதை தனது ட்விட்டர் மூலம் பகிர்ந்த அண்ணாமலை, “இன்று அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள தமிழக முன்னாள் முதல்வர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரு எடப்பாடி பழனிசாமி அவர்களை தொலைப்பேசி வழியாக தொடர்புகொண்டு எனது வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டேன் என்று ட்வீட் செய்துள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன் வாழ்த்து
எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து தெரிவித்த விசிக தலைவர், எடப்பாடி பழனிசாமி தனது சாதுரியத்தால் இந்த இடத்தை அடைந்துள்ளார். தமிழகத்தின் நலனை கருத்தில் கொண்டு எடப்பாடி பழனிச்சாமி தனது அரசியல் காய்களை நகர்த்த வேண்டும். பாஜகவை தூக்கி சுமப்பது அதிமுகவிற்கும், தமிழகத்திற்கும் நல்லதல்ல. பாஜக தமிழகத்தில் கால் ஊன்றினால் ஒட்டுமொத்த சமூக நல்லிணக்கணமும் பாதிக்கப்படும், மதத்தின் பெயரால் வன்முறைகள் தொடரும். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய தலைவர்கள் சமூக நீதிக்காக குரல் கொடுத்து, சமூக நீதியை பாதுகாத்துள்ளனர். அந்த இரு தலைவர்களையும் நெஞ்சில் நிறுத்தி சமூக நீதிக்கான ஒரு இயக்கமாகவே அதிமுகவை துணிந்து நடத்த வேண்டும் எனக் கூறியுள்ளார். 

ஜி.கே. வாசன் வாழ்த்து
அஇஅதிமுக பொதுக்குழு மற்றும் தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது வரவேற்கத்தக்கது. அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு வாழ்த்துகள் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி.கே. வாசன் ட்வீட் செய்துள்ளார்.

 

மத்திய இணை அமைச்சர் எல். முருகன் வாழ்த்து
அதிமுக  பொதுச்செயலாளர் ஆக பொறுப்பேற்கும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தமிழக முன்னாள் முதலமைச்சர், அண்ணன் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தேன் என தகவல் ஒளிபரப்பு துறை மற்றும் மீன்வளம், கால்நடை, மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன் ட்வீட் செய்துள்ளார். 

அன்புமணி ராமதாஸ் வாழ்த்து
அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அக்கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில்  வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். புதிய பொறுப்பில் அவரது பணி சிறக்க வாழ்த்துகள் என அன்புமணி ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.