பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிட விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் நீக்கியதையடுத்து, அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுள்ளார். இதற்கிடையே, ஓபிஎஸ் தரப்பில், உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை வானகரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி உள்ளிட்ட மேலும் பலர் புதிய நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டதோடு, முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்கள் மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.
பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓ.பிஎஸ் மற்றும் ஆதரவாளர்கள் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி கே.குமரேஷ் பாபு , பொதுச் செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாதென தடை விதித்திருந்தார்.
இந்த வழக்குகள் மீது உயர்நீதிமன்ற தனி நீதிபதி கே.குமரேஷ் பாபு இன்று காலை தீர்ப்பளித்தார்.. அப்போது அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் உள்ளிட்டோரை நீக்கியும், கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்தும் வெளியிடப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என அறிவித்தார். இதேபோல் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் முடிவை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கியும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதனிடையே, தனி நீதிபதி கே.குமரேஷ் பாபு பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து, ஆர்.மகாதேவன், முகம்மது சபீக் ஆகியோரை கொண்ட 2 நீதிபதிகள் அமர்வில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இன்று உடனடியாக மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது சட்ட நடவடிக்கைகள் முடியும்பட்சத்தில் நாளை விசாரிக்க 2 நீதிபதிகள் அமர்வும் ஒப்புக் கொண்டது.
உயர்நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகம் உள்ளிட்ட இடங்களிலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிமுகவினர் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமையகம் வந்த எடப்பாடி பழனிசாமிக்கு, பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியின்றி ஒருமனதாக வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் அளிக்கப்பட்டது. இதையடுத்து கட்சி தலைமையகத்தில் பொதுச் செயலாளராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பான கோப்பில் அவர் தனது முதல் கையெழுத்தை பதிவு செய்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, கட்சியின் பொதுச் செயலாளராக தம்மை தேர்வு செய்த நிர்வாகிகளுக்கும், அனைத்து தொண்டர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்.