டெல்லி: “இபிஎஸ் அணியினர் சட்டபூர்வமாக வென்றிருக்கிறார்கள், நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்ற தோற்றம் உருவாக்கப்பட்டாலும், இதில் பாஜக மற்றும் சங்பரிவார்களின் ஆதரவும் பின்னணியில் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
டெல்லியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், அதிமுக பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அதிமுக கட்சி தலைமைக்கு ஓபிஎஸ், இபிஎஸ் என்று வரும்போது, எடப்பாடி பழனிசாமியை பாஜக தேர்வு செய்திருக்கிறது. இதுதான் அவர்களுடைய அணுகுமுறையில் இருந்து தெரியவருகிறது.
இபிஎஸ் அணியினர் சட்டபூர்வமாக வென்றிருக்கிறார்கள், நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது, என்ற தோற்றம் உருவாக்கப்பட்டாலும் இதில் பாஜக மற்றும் சங்பரிவார்களின் ஆதரவும் பின்னணியில் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் அதிகாரப்பூர்வ பொதுச் செயலாளராக செயல்படக்கூடிய வாய்ப்பை பெற்றிருக்கிறார். அவருக்கு நான் தோழமையோடு விடுக்கின்ற வேண்டுகோள், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய தலைவர்கள் சமூக நீதிக்காக தமிழகத்தில் குரல் கொடுத்திருக்கிறார்கள். சமூக நீதியை பாதுகாத்திருக்கிறார்கள் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.
அந்த சமூக நீதிக் கொள்கைக்கு நேர் எதிரியாக இருக்கக்கூடிய பாஜகவை தூக்கி சுமப்பது, எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் கருத்தியல் அடிப்படையில் செய்கிற மாபெரும் துரோகம் ஆகும். எனவே எடப்பாடி பழனிசாமி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய தலைவர்களை நெஞ்சிலே நிறுத்தி சமூக நீதிக்கான ஓர் இயக்கமாகவே அதிமுகவை தொடர்ந்து நடத்துவதற்கு துணிந்து முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சமூக நீதி களத்தில் நானும் நிற்பதால், இந்த வேண்டுகோளை நான் அவருக்கு வைக்கிறேன்” என்று அவர் கூறினார். | வாசிக்க > அதிமுக பொதுச் செயலாளராக இபிஎஸ் ஒருமனதாக தேர்வு: அதிகாரபூர்வ அறிவிப்பு