சென்னை: அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பயோவில் ‘அதிமுக பொதுச் செயலாளர்’ என மாற்றம் செய்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வந்தார். தொடர்ந்து கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவியது. அதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் ஆனார். பின்னர் கட்சியில் ஒற்றைத் தலைமை என்ற குரல் எழுந்தது. அவர் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் ஆனார். இது பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவு.
இந்நிலையில், கட்சி விதிகளின்படி பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டது. அதில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக பலரும் மனு தாக்கல் செய்திருந்தனர். அதை எதிர்த்து தேர்தலுக்கு தடை கோரி ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், அந்த மனுவை தள்ளுபடி செய்ததோடு தேர்தல் முடிவை அறிவிக்கலாம் என நீதிமன்றம் இன்று தெரிவித்தது. அதன்படி, அதிமுக தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளராக அறிவித்தனர். இதன் தொடர்ச்சியாக, எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பயோவில் ‘அதிமுக பொதுச் செயலாளர்’ என மாற்றம் செய்துள்ளார்.