நாஷ்வில்லே:அமெரிக்காவில் தனியார் துவக்கப் பள்ளியில் புகுந்து, ஒரு இளம்பெண் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில், மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். அந்தப் பெண்ணும், போலீசின் பதிலடி தாக்குதலில் உயிரிழந்தார்.
அமெரிக்காவின் டென்னஸி மாகாணம் நாஷ்வில்லே நகரில், ‘தி கோவனன்ட்’ என்ற தனியார் பள்ளி உள்ளது. இங்கு, எல்.கே.ஜி., முதல் ஆறாம் வகுப்பு வரை 200 பேர் படிக்கின்றனர்.
நேற்று முன் தினம் மாலை, பள்ளிக்குள் புகுந்த ஒரு இளம்பெண், துப்பாக்கியால் சரமாரியாக சுடத் துவங்கினார்.
இந்த திடீர் தாக்குதலில், மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசாரும் பதிலடி தாக்குதல் நடத்தி, அந்தப் பெண்ணை பிடிக்க முயன்றனர்.
ஆனால், போலீசின் துப்பாக்கி குண்டுக்கு அந்தப் பெண்ணும் உயிரிழந்தார்.
இந்தத் தாக்குதலில் காயம் அடைந்தவர்கள், மன்றோ கேரல் குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ‘வாண்டர்பில்ட்’ மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுஉள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தை அறிந்து, பள்ளி முன் பெற்றோர் திரண்டனர். மற்ற குழந்தைகளை போலீசார் பாதுகாப்புடன் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
பலியான இளம் பெண், இரண்டுக்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. இந்த பெண் யார்? எதற்காக துப்பாக்கியால் சுட்டார் என்ற விபரங்களை தெரிவிக்க போலீசார் மறுத்து விட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement