2019ம் ஆண்டு நிரவ் மோடி தப்பி ஓடிய விவகாரத்தில், எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறதது என ராகுல் காந்தி பேசியிருந்தார். மோடி என்ற பெயரை பயன்படுத்தி சர்ச்சையாக பேசியது தொடர்பான அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதேநேரம் மேல்முறையீடு செய்ய உள்ளதாக ராகுல்காந்தி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து, அதற்கு அனுமதி அளிக்கும் விதமாக 30 நாட்கள் அவகாசம் அளித்து நீதிமன்றம் பினை வழங்கியிருந்தது. இதனிடையே மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி எம்பிக்கள், எம்எல்ஏக்கள் 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை பெற்றால் குற்றம் நிரூபிக்கப்பட்ட நாளில் இருந்து அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்கிற நிலை உள்ளது. இந்த நிலையில், வயநாடு தொகுதி எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். மக்களவை செயலகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதனை தொடர்ந்து டெல்லியில் உள்ள அரசு பங்களாவை அடுத்த மாதம் (ஏப்ரல்) 22-ந்தேதிக்குள் காலி செய்யுமாறு மக்களவை செயலகம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில், அரசு பங்களாவை காலி செய்கிறேன் என ராகுல் காந்தி அறிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் மக்களவை செயலாளருக்கு அவர் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:- மக்களவை உறுப்பினர் என்ற முறையில் வழங்கப்பட்ட அரசு வழங்கிய பங்களாவை நான் காலி செய்கிறேன். 4 முறை நான் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பொது மக்களுக்கு சேவையாற்றி உள்ளேன். 20 ஆண்டுகளாக அரசு பங்களாவில் இருந்த என்னுடைய மகிழ்ச்சியான தருணத்தை என்னால் என்றுமே மறக்க முடியாது. விதிமுறைகளுக்கு உட்பட்டு நான் நடக்கிறேன். இவ்வாறு ராகுல்காந்தி கூறி உள்ளார்
.