கடந்த 2019ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் கோலாரில் பிரதமர் நரேந்திரமோடி, நீரவ்மோடி, லலித் மோடி ஆகியோரை ஒப்பிட்டு ராகுல் காந்தி பேசிய பேச்சு தொடர்பாக குஜராத் மாநிலம் சூரத்தில் பூர்னேஷ் மோடி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்படது.
இந்த நிலையில் 2 ஆண்டுகள் தண்டணை விதிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டது. இதனால் ராகுல் காந்தி மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட வயநாடு லோக் சபா தொகுதி காலியானதாகவும் மக்களவை செயலகத்தால் அறிவிக்கப்பட்டது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை எனக்கூறி காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். காங்கிரஸின் கூட்டணி கட்சிகள் மற்றும் பாஜக எதிர்ப்பு நிலைப்பாட்டில் உள்ள கட்சிகளும் இதனை கடுமையாக சாடி வருகின்றனர்.
இந்நிலையில், ராகுல்காந்தி, 12, துக்ளக் லேனில் உள்ள அரசு அவருக்கு ஒதுக்கியிருந்த பங்களாவை அவர் ஏப்ரல் 22ம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. அவர் லோக்சபா உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட சில நாட்களில் அவர் அரசு குடியிருப்பை காலிசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளார். இதுகுறித்து விளக்கமளித்துள்ள மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், விதிகளைப்பொருத்தவரை, தகுதி நீக்கம் செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரசின் குடியிருப்புகளில் தொடர்ந்து வசிக்கக்கூடாது. அவர்களுக்கு அரசு பங்களாவை காலி செய்ய 30 நாட்கள் கெடு வழங்கப்படும் என்றும், அதன்படி ராகுல் காந்தி வரும் ஏப்ரல் 22ம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.
இத்துடன் 4வது முறையாக ராகுல் காந்தி லோக்சபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2004ல் உத்திரபிரதேசத்தின் அமேதி தொகுதியில் அவர் முதல் முறையாக எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019ம் ஆண்டில், இவர் அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணியிடம் தோற்றார். ஆனால் கேரளாவின் வயநாட்டில் வெற்றி பெற்றார்.